புதுடெல்லி: ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 5-ல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜகவும் காங்கிரஸும் 89 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட், பிவானி தொகுதியிலும் பாஜக கூட்டணிக் கட்சியான ஹரியானா லோஹித் கட்சி சிர்ஸா தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
இங்கு தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்த பாஜகவுக்கு எதிரான சூழல் நிலவுகிறது. இதன் லாபத்தால் ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயல்கிறது. மக்களவைத் தேர்தலில் கிடைத்த கூடுதல் தொகுதிகளால் காங்கிரஸுக்கு ஹரியானாவில் எழுச்சி காணப்படுகிறது. இதை முன்கூட்டியே புரிந்துகொண்ட பாஜக, மக்களவைத் தேர்தல் சமயத்தில் தனது முதல்வர் மனோகர் லால் கட்டாரை அகற்றிவிட்டு நயாப் சிங் சைனியை அமர்த்தியது. அவரே தற்போது முதல்வர் வேட்பாளராக கருதப்படுகிறார். அவருக்கு போட்டியாக பாஜக மூத்த தலைவரும் 6-வது முறை எம்எல்ஏவுமான அனில் விஜ் காணப்படுகிறார்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் – பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. எனினும் காங்கிரஸ் வாக்குகளை பிரிக்க இந்திய தேசிய லோக் தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும் துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி, ஆம் ஆத்மி ஆகியவை தனித்தும் போட்டியிடுகின்றன. இவற்றுடன் தனி பலம் கொண்ட சுயேச்சைகளும் வாக்குகளை பிரிக்கின்றனர்.
இதுகுறித்து இருமுறை காங்கிரஸ் முதல்வரான பூபேந்தர் சிங் ஹூடா கூறும்போது, “பிற கட்சிகள் mஅனைத்தும் காங்கிரஸின் வாக்குகளை பிரிக்கவே போட்டியிடுகின்றன. மேலும் பாஜக திட்டமிட்டு வாக்குகளை பிரிக்க பல சுயேச்சைகளை களம் இறக்கியுள்ளது’’ என்றார்.
பாஜகவின் தற்போதைய முதல்வர் நயாப் சிங், நேர்மையானவர் என்பதை சுட்டிக்காட்டியே காங்கிரஸின் பல ஊழல்களை தனது பிரச்சாரத்தில் பிரதமர் மோடி முன்னிறுத்துகிறார். முன்னாள் முதல்வர் ஹூடா – குமாரி ஷெல்ஜா இடையிலான கருத்து வேறுபாடுகளையும் பிரதமர் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சி கோஷ்டி மோதலுக்கு பெயர் பெற்றது என்றார்.
ஜாட் சமூகத்தினர் அதிகமுள்ள மாநிலம் ஹரியானா. இதனால் அவர்களுக்கான ஒதுக்கீடு, விவசாயிகள் கோரிக்கைகள் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாதை திட்டம் ஆகியவற்றையும் காங்கிரஸ் முன்னிறுத்துகிறது. இதை சமாளிப்பது பாஜகவுக்கு பெரும் சவாலாக உள்ளது.