ஷாருக்கான் நடிப்பில் கடந்தாண்டு `பதான்’, `ஜவான்’, `டங்கி’ என மூன்று திரைப்படங்கள் வெளியாகி ஹிட்டடித்திருந்தது.
ஐந்து ஆண்டுகளாக ஷாருக்கானுக்கு சினிமாவில் பெரியளவிலான வெற்றிக் கிடைக்கவில்லை. ஆனால், கடந்தாண்டு வெளியான மூன்று திரைப்படங்களும் வெற்றியைக் கொடுத்தது ஷாருக்கானின் கம்பேக்குக்கு பாதை அமைத்தது.
இந்நிலையில் 2023-ம் ஆண்டிற்கான `IIFA’ விருது விழா நேற்றைய தினம் அபுதாபியில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருது `ஜவான்’ திரைப்படத்திற்காக ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை இயக்குநர் மணிரத்னமும், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானும் வழங்கினர். இயக்குநர் மணிரத்னம் மேடையில் ஏறியதும் அவரின் காலை தொட்டு ஆசிர்வாதம் பெற்றார், ஷாருக். இதுமட்டுமல்ல இந்த விருது விழா முழுவதையும் விக்கி கெளஷல், கரண் ஜோகர் ஆகியோருடன் அத்தனை பொழுதுபோக்கு அம்சத்துடன் தொகுத்து வழங்கியிருக்கிறார் ஷாருக்கான்.
இதனை தொடர்ந்து மேடையில் பேசிய அவர், ” எனக்கு சினிமாவைப் பற்றி பல பாடங்களை எடுத்துரைத்த மணிரத்னத்திற்கும் , ஏ. ஆர். ரஹ்மானுக்கும் நன்றி. விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. எனக்கு விருதுகளை மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால், நான் விருதுகளுக்கு பேராசைப்படுவேன். இந்த விருது எனக்கு மிகவும் பர்சனல். என்னுடன் இந்த பிரிவுக்கு நாமினேட்டாகி இருந்த ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், விக்ரந் மாசி, விக்கி கெளஷல், சன்னி தியோல் ஆகியோருக்கும் வாழ்த்துகள். அனைவரும் இந்த விருதுக்கு தகுதியானவர்கள்தான்.” என பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…