உதயநிதிக்கு துணை முதல்வர் எப்போது வழங்கப்படும், அமைச்சரவையில் என்னவெல்லாம் மாற்றம் இருக்கும் என நீண்டுகொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது. உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்ததோடு, முதல்வர் வசமிருந்த திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையை கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
உதயநிதி தவிர முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, நாசர், கொறடாவாக இருந்த கோவி செழியன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகிய நான்கு பேர் அமைச்சரைவையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். மேலும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும்,
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும்,
அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நிதித்துறையுடன், சுற்றுச்சூழல் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் காதி மற்றும் பால்வளத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், க.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் க.ராமச்சந்திரனை கொறடாவாக நியமித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. பொறுப்பாக இதுவும் அமைச்சரவைக்கு நிகரானதுதான் என்பதால், இதில் ராமச்சந்திரனுக்குக் கொஞ்சம் ஆறுதல்தான். இந்த மாற்றத்தில் பொன்முடியின் மாற்றம்தான் எல்லோரின் புருவத்தையும் உயர்த்தியிருக்கிறது.
கட்சியில் மிக முக்கியமான சீனியர், துணைப் பொதுச்செயலாளர், அமைச்சரவையிலும் பெரிய துறை என ஆதிக்கம் செலுத்திவந்த பொன்முடிக்கு ஏன் வனத்துறை கொடுக்கப்பட்டது என்ற விசாரணையில் இறங்கினோம்.
“வனத்துறையும் பெரிய துறைதான்” எனப் பேசத் தொடங்கிய அறிவாலய சீனியர் அமைச்சர் ஒருவர், “இந்த மாற்றம் பொன்முடியாக விரும்பி ஏற்றுக்கொண்டத்துதான். கடந்த டிசம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதும் சிறை சென்றதும், அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதும் பொன்முடியின் மனதில் வெகுவான பாதிப்பை ஏற்படுத்தியது. அதுவும் அவரது மனைவிக்கும் சிறை என்பதுதான் அவரை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. எனவே, அமைச்சரவை மாற்றம் என்ற பேச்சு எழுந்ததுமே தலைமையிடம் சென்று தனக்கு வேறு ஏதாவது துறை மாற்றிக்கொடுக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார்.
அப்போதைக்கு எந்த முடிவும் எடுக்காததால் தலைமையிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. ஆனால், தொடர்ந்து பொன்முடி தனக்கு வேறு துறையை மாற்றிக்கொடுக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார்” என்றவர்… “இந்தத் துறை மாற்றத்தை வலியுறுத்தியதே பொன்முடியின் குடும்பத்தில் இருந்தவர்கள்தான். சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரத்தையடுத்து மத்திய அரசு, ஆளுநரின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும் துறை வேண்டாம் என நினைத்திருக்கிறார்கள் குடும்பத்தினர். அதை பொன்முடியிடமும் சொல்லி, துறை மாற்றி வாங்கியிருக்கிறார்கள்.
இப்போது துறை மாற்றப்பட்டிருப்பதன் மூலம் கொஞ்சம் பிரச்னைகளிலிருந்து ஒதுங்கியிருக்கலாம் என நினைக்கிறார்களாம். அதனாலேயே இந்தத் துறை மாற்றம் நடந்திருக்கிறது என்கிறார்கள். அதுமட்டுமல்ல, நிர்வாகரீதியிலும் சில சிக்கல்கள் எழுந்ததைத் தீர்க்க முடியாமல் தவித்ததும் ஒரு காரணம்” என பொன்முடி மாற்றத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறார்கள்.