சென்னை: ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் 34 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆயுதபூஜை, தீபாவளி ஆகிய பண்டிகைகளும், வடமாநிலங்களில் சாத் பண்டிகையும் வரும் மாதங்களில் கொண்டாடப்பட உள்ளன. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: பண்டிகை காலத்தில், சொந்த ஊருக்கு ரயிலில் செல்லும் மக்கள் நெரிசல் இன்றி பயணிக்கும் வகையில், சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் மொத்தம் 302 பயணங்களுடன் 34 சிறப்புரயில்களை இயக்குவதாக தெற்குரயில்வே அறிவித்துள்ளது. இவற்றில், 268 பயணங்கள் அடங்கிய 28 சிறப்பு ரயில்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது.
கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் 130 பயணங்களுடன் 49 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு பயண எண்ணிக்கை குறிப்பிட்டத்தக்க அளவு அதிகரித்துள்ளது. பண்டிகை மாதங்களில் கடைசி நேர நெரிசல் மற்றும் காத்திருப்புப் பட்டியலைத் தவிர்க்க, பயணிகள் முன்கூட்டியே டிக்கெட்களை முன்பதிவு செய்ய வேண்டும். சிறப்பு ரயில்களின் விரிவான அட்டவணைகள், வழித்தடங்கள் மற்றும் நேரங்கள் ஆகியவை அதிகாரப்பூர்வ தெற்கு ரயில்வே இணையதளம் மற்றும் ஐஆர்சிடிசி போர்ட்டல்களில் கிடைக்கின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் வரும்பண்டிகை காலத்தில் 6,000-க்கும்மேற்பட்ட சிறப்பு ரயில்களைஇயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.