திருச்சி: “காவிரி பிரச்சினையில் அரசியல் கலக்கக் கூடாது,” என்று மத்திய கனரக தொழில் மற்றும் உருக்குத் துறை அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களுரூவிலிருந்து இன்று (செப்.30) தனி விமானம் மூலம் திருச்சி வந்த மத்திய கனரக தொழில் மற்றும் உருக்குத் துறை அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பெருமாள், தாயார் சன்னதிகளில் தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது : “ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் அருளை பெறுவதற்காக இங்கு வந்து தரிசனம் செய்தேன். இங்கிருந்து சேலம் சென்று சேலம் உருக்காலையை ஆய்வு செய்யவுள்ளேன். 1970-களில் தொடங்கப்பட்ட சேலம் உருக்காலை முதலில் நல்ல லாபத்தில் இயங்கியது. கடந்த சில ஆண்டுகளாக நலிவடைந்துள்ளது. அதற்கு மீண்டும் புத்துயிர் அளித்து, சிறப்பாக செயல்பட செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளேன்.
உரிய காலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யும்போது காவிரி விவகாரத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. மழைப் பொழிவு குறைவாக இருக்கும்போது தான் நீர்பங்கீட்டில் பிரச்சினை ஏற்படுகிறது. இதனை தமிழக அரசும், தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகளும் புரிந்து கொள்ள வேண்டும். நல்ல மழைப் பொழிவு இருக்க வருணபகவானை நான் வேண்டிக் கொள்கிறேன். காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டங்கள் உதவாது. இரு தரப்பும் விட்டுக் கொடுத்து போவது (Give and take policy) தான் இதற்கு தீர்வாக இருக்க முடியும். இரு மாநில விவசாயிகளும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். காவிரி பிரச்சினையில் அரசியல் கலக்கக் கூடாது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டது தமிழகத்தின் அரசியல் விவகாரம். இதில் நான் கருத்துக் கூற விரும்பவில்லை,” என்றார்.