புதுடெல்லி: கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்குத் தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
இவ்வழக்கு விசாரணை செப்.27-ல் நடைபெற இருந்தது. மேற்கு வங்க அரசின் வேண்டுகோளை ஏற்று, விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. மருத்துவர்களின் பணியிடபாதுகாப்பு சார்ந்து எடுக்கப்பட் டுள்ள நடவடிக்கை தொடர்பான பிரமாணப் பத்திரத்தை மேற்கு வங்க அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. அந்தபிரமாணப் பத்திரத்தை பொறுத்து,தங்களது வேலை நிறுத்தப் போராட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்றுபயிற்சி மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர்.
கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில், கடந்தஆகஸ்ட் 9-ம் தேதி பெண் பயிற்சிமருத்துவர் பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பாக, காவல் துறையுடன் இணைந்து பணியாற்றி வந்த தன்னார்வலர் சஞ்சய் ராயை (33) காவல் துறை கைது செய்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ்,காவல் துறை அதிகாரி அபிஜித்மண்டல் ஆகிய இருவரையும் சிபிஐகைது செய்துள்ளது. இதனிடையேஇவ் வழக்கை உச்ச நீதிமன்றம்தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
பயிற்சி மருத்துவர் கொலைக்குநீதி கேட்டு, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சிமருத்துவர்கள், மருத்துவமனை களில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல், அதற்கான பிரதிநிதிகளை முறையாக தேர்வு செய்தல், பணிக்குழுஅமைத்தல் என பல கோரிக்கைகளை மேற்கு வங்க அரசிடம் முன்வைத்தனர். 40 நாட்களுக்கு மேலாக அவர்களது போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு தங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்ட மருத்துவர்கள், செப்டம்பர் 21-ம் தேதி முதல் பணிக்கு திரும்பினர். எனினும் தங்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் எச்சரித்தனர்.