ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு வருகை தந்துள்ள 10 ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள், அங்கு நிலவும் அமைதி குறித்தும் உள்ளூர் மக்களிடம் உருவாகி இருக்கும் புத்தெழுச்சி குறித்தும் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
பிரிட்டனைச் சேர்ந்த க்ளென்ஸ் ஜெம் என்ற பெண் சுற்றுலா பயணி கூறுகையில், “நான் முதன்முறையாக 1980-ம் ஆண்டு காஷ்மீருக்கு சுற்றுலா வந்தேன். அப்போது எனக்கு வயது 43. காஷ்மீரின் அழகைக் கண்டு அதிசயித்தேன். இப்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு மீண்டும் சுற்றுலாவுக்கு வந்துள்ளேன். என்னுடன், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் வந்துள்ளனர். இப்போதையை சூழல் எங்களை ஆச்சரியப்படுத்துகிறது. தற்போது ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தகைய சூழலிலும் இங்கு அமைதி நிலவுகிறது. மக்கள் வாழ்க்கை குறித்த நம்பிக்கையுடன் காணப்படுகின்றனர்” என்று தெரிவித்தார்.
அவரது குழுவைச் சேர்ந்த மற்றொரு சுற்றுலாப் பயணி கூறுகையில், “முன்பு காஷ்மீர் குறித்து எதிர்மறைச் செய்திகளே வந்துகொண்டிருந்தன. ஆனால், இப்போது சூழல் மாறியுள்ளது. இந்நிலத்தில் அமைதி திரும்பியுள்ளது. அதுவும் தேர்தல் நடைபெறும் இந்த சமயத்தில் இங்கு அமைதி காணப்படுவது எங்களுக்கு ஆச்சரியம் தருகிறது.” என்று தெரிவித்தார்.