புதுடெல்லி: ஜெர்மனியின் மூன்சென் நகரில்உள்ள கொலோன் பல்கலைக்கழகத்துக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும், அதன் 60 வருடப் பழமையான தமிழ்த்துறை மூடப் படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஜெர்மனியின் மூன்சென் நகரில் உள்ள கொலோன் பல் கலைக்கழகத்தில் கலை மற்றும் சமூகவியல் கல்விப்புலத்தின் கீழ் இந்தியவியல் மற்றும் தமிழ்க்கல்வி துறை கடந்த 1963-ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. சர்வதேச அளவிலான பொருளாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் 2014முதல் கொலோன் பல்கலைக்கழ கத்துக்கு நிதிப் பற்றாக்குறை உருவானது.
இதனால், இரண்டு முறை தமிழ் துறை மூடப்படும் நிலைஏற்பட்டது. எனினும், அமெரிக்கவாழ் இந்தியர்கள் 2018-ல் சுமார் ரூ.1.5 கோடி, ஐரோப்பிய தமிழர் கூட்டமைப்பு ரூ.20லட்சம் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் (கடந்த ஜுலை 2021-ல்) ரூ.1.24 லட்சம் நிதி வழங்கினர். இதனால் மூடப்படும் நிலை தவிர்க்கப்பட்டது.
எனினும், கடைசியாக, தமிழ்நாடு அரசு வழங்கிய நிதியும் தீர்ந்து விட்டது. இதனால், அந்த தமிழ்த் துறையின் ஒரே ஒரு உதவிப் பேராசிரியராக இருக்கும் வொர்ட்மான் ஒப்பந்தக் காலம் அடுத்த மாதம் அக்டோபருடன் முடிகிறது. இவருக்குப் பின் யாரும் நியமிக்கப்படாமையால், கொலோன் பல்கலைழகம் தனது60 வருடமாக நடத்திய தமிழ்க்கல்வித் துறையை இழுத்து மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.
தமிழக அரசுக்கு கடிதம்: இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் தமிழ்த் துறையின் உதவிப் பேராசிரியர் ஸ்வென் வொர்ட்மான் கூறும்போது, ‘‘கடந்த முறை சிக்கல் ஏற்பட்டபோது, ‘இந்து தமிழ்’ செய்தியால் தமிழ்நாடு அரசு நிதி அளித்து உதவியது. இந்தமுறையும் தமிழ்த் துறை மூடுவதைத் தடுக்க நிதி கேட்டு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறைக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன். அக்டோபருக்கு முன்பாக உதவி கிடைக்கவில்லை எனில் இங்கு தமிழ்த்துறை நிரந்தரமாக மூடப்படுவதை தடுக்க முடியாது.
இதுபோன்ற நிலையைதடுக்க இங்கு தமிழ் இருக்கை அமைக்கலாம். மத்திய அரசு சிங்கப்பூரில் அமைக்க இருப்பதை போல் கொலோனிலும் திருவள்ளுவர் மையம் அமைத்தாலும் இந்த தமிழ் துறையை தக்கவைக்க முடியும்’’ என்றார். இவர் ஆங்கிலத்துடன் ஜெர்மனி, சம்ஸ்கிருதம், இந்தி, பாலி மொழிகளையும் அறிந்து வைத்துள்ளார்.
அக்டோபரில் தமிழ்த் துறை மூடப்பட்டு விட்டால் மீண்டும் அதை திறப்பது கடினம் எனக் கருதப்படுகிறது. இதனால், இப்பிரச்சனையில் தமிழக அரசு அல்லது மத்திய அரசு தலையிட்டு கொலோனின் தமிழ்த் துறையை காக்க வேண்டும் என ஐரோப்பிய தமிழர்கள் சார்பில் தமிழ்நாடு, மத்திய அரசுகளுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளனர்.