திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலைய கடைகளுக்கான ஏலம் ரத்து: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: திண்டுக்கல் பேருந்து நிலைய 34 கடைகளுக்கான ஏலத்தை ரத்து செய்து மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனபாலன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் : நான் திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக உள்ளேன். தமிழ்நாடு வெளிப்படை ஏல அறிவிப்பு சட்டத்தின்படி ஏல அறிவிப்பை உள்ளூர் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய வேண்டும். மேலும் ஏலத்தில் அதிக தொகை கேட்கும் நபருக்கு ஏலம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக காமராஜர் பேருந்து நிலையத்தில் உள்ள 34 கடைகளை வாடகைக்கு விடுவதற்கான ஏல அறிவிப்பு நடைபெற்றது இதற்காக மாநகராட்சி கூட்டம் 2022 நவம்பர் 17ம் தேதி நடந்தது. ஏல அறிவிப்பை உள்ளூர் செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும் . ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை . கோவை பதிப்பில் வெளியிட்டனர். 34 கடைகளுக்கான ஏலம் நடைபெற்றது.

இதில், மொத்தமாக 47 நபர் மட்டுமே கலந்து கொண்டனர். தமிழ்நாடு வெளிப்படை தன்மை ஏல அறிவிப்புச் சட்டத்தின் படி ஏலம் நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு உள்ளூர் அல்லது மாவட்ட அளவிலான செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்திருக்க வேண்டும். அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ளும் படி இருக்க வேண்டும். ஆனால், காமராஜர் பேருந்து நிலைய கடைகளுக்கான ஏலம் அவ்வாறு நடைபெறவில்லை.

எனவே, திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் உள்ள 34 கடைகளுக்கான ஏல அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் அதை ரத்து செய்து, மீண்டும் ஏல அறிவிப்பை வெளியிட்டு முறையாக நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது ஏல அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், 34 கடைகளுக்கான ஏலத்தை ரத்து செய்தும், புதிதாக அறிவிப்பு வெளியிட்டு, விதிமுறைகளை பின்பற்றி , வெளிப்படைத் தன்மையுடன் ஏலம் நடத்தவும் உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.