புதுடெல்லி: இந்தியாவுடன் நட்புறவுடன் செயல் பட்டிருந்தால் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியத்தை (ஐஎம்எப்) விட அதிகளவிலான நிதியுதவியை இந்தியா வழங்கியிருக்கும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித் துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்துக்கு உட்பட்ட குரெஸ்தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற ராஜ்நாத் சிங் இதுகுறித்து மேலும் பேசியதாவது: பாகிஸ்தான் நண்பர்களுக்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால் நமது உறவில் விரிசல் ஏற்பட்டது ஏன் என்பதை உணர வேண்டும். நாம் அனைவரும் அண்டைவீட்டார். நாம் நட்புவை பேணியிருந்தால் சர்வதேச நிதியத்திடம் (ஐஎம்எப்) பாகிஸ்தான் தற்போது கோரிய நிதியை விட அதிகமான நிதி உதவியை வழங்க இந்தியா தயாராக இருந்திருக்கும்.
கடந்த 2014-15 நிதியாண்டில் காஷ்மீர் பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி ரூ.90,000 கோடி மதிப்பிலான நிதி தொகுப்பை அறிவித்தார். இந்த அர்ப்பணிப்பு சர்வதேச உதவியை பாகிஸ்தான் நம்பியிருப்பதற்கு முற்றிலும் மாறுபட்டது. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் குறிப்பிட்டது போல, நமது நண்பர்களை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், நமது அண்டை வீட்டாரை ஒருபோதும் மாற்றிக்கொள்ள முடியாது என்றார். அவரின் இந்த கூற்றை உணர்ந்து இந்தியாவுடனான உறவை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.