மெரினாவில் அக்.6 வரை ட்ரோன்கள் பறக்க தடை – விமான சாகச நிகழ்வுக்காக நடவடிக்கை

சென்னை: விமான சாகச நிகழ்ச்சியையொட்டி இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை மெரினா கடற்கரையில் ட்ரோன்கள் பறக்க விட தடை விதித்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் இன்று பிறப்பித்த உத்தரவு: “இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92-வது ஆண்டை நிறைவு செய்யும் வகையில் சென்னையில் அக்டோபர் 6-ம் தேதி பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு தொடங்கி ஒன்றரை மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், விமானப்படையின் பல்வேறு வகைகளைச் சேர்ந்த 72 விமானங்கள் சாகசங்களில் ஈடுபட உள்ளது. ஆண்டு தோறும் டெல்லியில் மட்டுமே இந்த சாகச நிகழ்ச்சி நடந்து வந்தது. பின்னர் சண்டிகர் மற்றும் உத்திரபிரதேசத்திலும் நடைபெற்றது. தற்போது சென்னையிலும் நடைபெற உள்ளது. இதை பொது மக்கள் அனைவரும் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மெரினா கடற்கரையில் இருந்து பொது மக்கள் அனைவரும் இந்த விமான சாகச நிகழ்ச்சியை இலவசமாக கண்டு களிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விமானப்படை தலைவர், தலைமைச்செயலர், அமைச்சர்கள், ராணுவ உயரதிகாரிகள் மற்றும் மூத்த ஆயுதப்படை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். விமான சாகசத்துக்கான ஒத்திகைகள் இன்று (1ம் தேதி) முதல் 5ம் தேதி வரை மெரினா கடற்கரையில் நடைபெறவுள்ளது.இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மெரினா கடற்கரை பகுதியை 1.10.2024 முதல் 6-10-2024 வரை (அரசு ஏற்பாடுகள் தவிர) சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு (RED ZONE), அந்த பகுதிகளில் தொலைதூர பைலட் விமான அமைப்புகள், ட்ரோன்கள் மற்றும் எந்த விதமான பொருட்களும் பறக்கவிட தடை விதிக்கப்படுகிறது” என்று காவல் ஆணையர் உத்தரவில் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை விமான நிலையத்தைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.