பெய்ரூட்: லெபனானின் பெய்ரூட் நகரின் மத்தியப் பகுதியில் இஸ்ரேல் இன்று (திங்கள்கிழமை) காலை நடத்திய வான்வழித் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இஸ்ரேல் தாக்குதல் தீவிரமடையும் சூழலில் ஒரே வாரத்தில் நஸ்ரல்லா உள்பட 7 முக்கியத் தலைவர்கள் உயிரிழந்தனர்.
கடந்த ஓராண்டாகவே இஸ்ரேல் – லெபனான் இடையே மோதல் நிலவிவந்தாலும், கடந்த திங்கள்கிழமை முதல் தீவிரத் தாக்குதல் நடந்து வருகிறது. அதிலும் முதன்முறையாக இன்று (திங்கள்கிழமை) காலை பெய்ரூட் நகரின் மத்தியப் பகுதியான கோலாவில் குடியிருப்புகள் நிரம்பிய இடத்தில் இஸ்ரெல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 4 பேர் இறந்தனர். இவர்களில் மூன்று பேர் பாலஸ்தீன விடுதலை பாப்புலர் முன்னணி (PPLF) என்ற ஆயுதக் குழுவின் முக்கியத் தலைவர்கள் என அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் கடந்த திங்கள்கிழமை லெபனானின் தெற்கு பகுதி நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்தது. லெபனானின் ஹெர்மல், பிப்லோஸ், பால்பெக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதை இஸ்ரேல் உளவுத் துறை கண்டறிந்ததையடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என அந்நாட்டு ராணுவம் தெரிவித்து வருகிறது.
லெபனான் நாட்டில் கடந்த 1985-ம் ஆண்டில் ஹிஸ்புல்லா அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்புக்கு ஈரானும் சிரியாவும் ஆயுத உதவி, நிதியுதவி அளித்தன. இரு நாடுகளின் உதவியால் ஹிஸ்புல்லா குறுகிய காலத்தில் வளர்ச்சிஅடைந்தது. கடந்த 2006-ம் ஆண்டில்ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே 34 நாட்கள் போர் நடைபெற்றது. அப்போது ஐ.நா. சபை தலையிட்டதால் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
1030 பேர் பலி.. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை தொடங்கி ஒரு வாரமாக இஸ்ரேல் லெபனான் மீது நடத்திவரும் தாக்குதலில் 87 குழந்தைகள், 156 பெண்கள் உள்பட 1030 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் தொடர் தாக்குதல் நடந்துவரும் நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டுமே 105 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பால்பெக் ஹெர்மல், சிடோன், கலீ, ஹாஃபியா பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று (செப்.30) காலை பெய்ரூட்டின் மத்தியப் பகுதியான கோலாவில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதேபோல் ஏமனில் ஹவுத்திப் படைகளின் இலக்குகளையும் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இன்றைய தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லெபனானின் பெக்கா பிராந்தியத்தில் இன்று காலை வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுதங்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சில இடங்களைக் குறிவைத்து அழித்துள்ளோம். அந்த இடங்கள் ஹிஸ்புல்லாக்களுடன் தொடர்புடையவை” என்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் போராட்டம்: ஈரான், சிரியாவின் ஆதரவுடன் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா, லெபனானின் ரகசிய இடங்களில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். ஈரானின் மூத்த தலைவர்கள், ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர்களுக்கு மட்டுமே அவரின் இருப்பிடம் தெரியும். இந்நிலையில் அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டது உறுதியானது. முன்னதாக ஹிஸ்புல்லா ட்ரோன் பிரிவுத் தலைவர் உள்ளிட்ட பலரும் கொல்லப்பட்டனர்.
நஸ்ரல்லா கொல்லப்பட்டதைக் கண்டித்து பாகிஸ்தானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தை நோக்கி முன்னேறிய போராட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டத்தைக் கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.