நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடக்க இருக்கிறது. இதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மாநாட்டில் கலந்து கொள்ள வலியுறுத்தி நிர்வாகிகளுக்கு அழைப்பு கொடுத்து வருகிறார். அதன்படி நேற்று திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தஞ்சாவூர் சென்ற ஆனந்திற்கு, பட்டுக்கோட்டை நகரத் தலைவர் ஆதி.ராஜாராம் பூசணிக்காய் சுற்றி வரவேற்றார். அப்போது, “ஊர் கண்ணு முழுக்க தளபதி மேலத்தான் இருக்கு, தளபதி விஜயை நேரில் பார்த்து திருஷ்டி சுத்த வேண்டுமுனு ஆசை, ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்காது. அதனால் அவரோட நிழலாக இருக்கிற உங்களுக்கு பூசணிக்காய் சுத்தி திருஷ்டி கழிக்கிறேன்.” என நிர்வாகிகளுடன் சேர்ந்து பூசணிக்காய் சுத்தி உடைத்தார்.
கும்பகோணத்தில் தனியார் மண்டபம் ஒன்றில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் ஆனந்த் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது புஷ்பா என்ற பெண் மேடைக்கு அருகில் சென்றார்.
வாக்கு வாதம் செய்த பெண்..
அப்போது புஷ்பா, “என் அண்ணன் தங்கத்துரை கும்பகோணம் மாநகரத் தலைவராக இருக்கிறார். அவர் விஜய் மக்கள் இயக்கத்தில் தஞ்சை மாவட்டத் தலைவராக இருந்தார். விஜய் மக்கள் இயக்கம் தமிழக வெற்றிக் கழகமாக கட்சியாக மாற்றப்பட்ட பிறகு தங்கத்துரைக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. விஜய்க்காக சொத்தை விற்று செலவு செய்து மக்கள் இயக்கத்தை வளர்த்தார். மன்றமே எங்கள் இடத்தில் தான் இருந்தது. ஆனால் இப்போது என் அண்ணனை ஓரங்கட்டி வைத்துள்ளனர்” என சத்தமாக ஆனந்திடம் சொல்லிக்கொண்டே இருந்தார்.
அப்போது ஆனந்த, “சரிம்மா, நிதானமாக இருங்க, கோச்சிக்காதீங்க, நீங்க இந்த விஷயத்தை இதற்கு முன்பு என்னிடமோ அல்லது நம் நிர்வாகிகளிடமோ சொல்லியிருக்கிறீர்களா?. நீங்க சொல்ல நினைப்பதை மனுவாக எழுதி எங்கிட்ட கொடுங்க நான் என்னவென்று பார்க்கிறேன்” என்றார்.

ஆனலும் புஷ்பா, இது குறித்து வாக்கு வாதம் செய்ததுடன் தங்கத்துரை விஷயத்தை பேசிக்கொண்டே இருந்தார். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியிலிருந்த சில பவுன்சர்கள் புஷ்பாவை அழைத்து சென்று கண்ணாடி அறைக்குள் தனியாக உட்கார வைத்தனர். இதனை செய்தியாளர்கள் படம் எடுக்கவிடாமலும் தடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவசர அவசரமாக நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஆனந்த் கிளம்பி விட்டார்.
புஷ்பா இப்படி பேச என்ன காரணம்?
இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம், “விஜய் மீது உண்மையான பாசம் வைத்து இயக்கத்தை வளர்த்தவர்கள் பலர் உள்ளனர். இது போன்ற நபர்கள் மீது சில முக்கிய நிர்வாகிகள் ஆனந்திடம் தவறான தகவலை சொல்லி அவரை நெருங்க விடாமல் செய்து விடுகின்றனர். ஆனந்தும் சிலர் சொல்வதை விசாரித்து உண்மை தன்மையை அறியாமல் கண்டுக்கொள்ளாமல் விட்டு விடுகிறார்.

இதை சாதகமாக்கி ஆனந்துடன் நெருக்கமாக இருக்கும் நிர்வாகிகள், தங்கத்துரை போன்ற நிர்வாகிகளை ஓரம் கட்டி விடுகின்றனர். இதனுடைய வெளிப்பாடுதான் தங்கத்துரையின் சகோதரி புஷ்பா வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டதற்கு காரணம். கட்சியாக மாறிவிட்ட இந்த சூழலில் உண்மையாக உழைப்பவர்கள் யார், விசுவாசமாக இருப்பவர்கள் யார், நடிப்பவர்கள் யார் என்றெல்லால் தளபதியின் நம்பிக்கையை பெற்றிருக்கும் ஆனந்த், கள நிலவரத்தின் மூலம் தெரிந்து வைத்து செயல்பட்டால் தளபதிக்கு கூடுதல் பலம் கிடைக்கும். அரசியலில் வெற்றிக் காண்பதும் உறுதி” என்றனர்.