`விஜய், உதயநிதி, க்ரீம் பன், ஜி.எஸ்.டி..!’ – தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ்க்ளூஸிவ் பதில்கள்

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி, அமைச்சரான செந்தில் பாலாஜி, வி.சி.க-வின் மது ஒழிப்பு மாநாடு சர்ச்சை, விஜய் கட்சியின் மாநாடு தேதி அறிவிப்பு உள்ளிட்ட பரபரப்பான அரசியல் கேள்விகளுடன் தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்தேன்…

” ‘100-வது நாளில் மோடி ஆட்சி தோல்வியடைத்துவிட்டது’ என, காங்கிரஸ் விமர்சனம் செய்திருக்கிறதே?”

“பிரதமர் மோடி ஒருநாள் கூட ஓய்வு இல்லாமல் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். உதாரணமாக ரூ.15 லட்சம் கோடி முதலீடு கிடைத்திருக்கிறது. ரூ.3 லட்சம் கோடி அடிப்படை கட்டமைப்புகளுக்கு மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. 60 மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. மூன்று கோடி பெண்களை லட்சாதிபதியாக்கியிருக்கிறார். ஆகவே காங்கிரஸ் இப்படித்தான் பேசிக்கொண்டிருக்கும். அதையெல்லாம் நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.”

பிரதமர் நரேந்திர மோடி

“ஆனால், ‘பிரதமர் மோடியை உளவியல் ரீதியாக உடைத்துவிட்டோம்’ என்கிறாரே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி?”

“ராகுல் காந்திக்குத்தான் உளவியல் ரீதியிலான பிரச்னை இருக்கிறது. பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும்போது நாட்டின் வளர்ச்சி குறித்துப் பேசுகிறார். ஆனால் ராகுல் காந்தியோ தொடர்ச்சியாக எதிர்மறையான கருத்துக்களைச் சொல்கிறார். பொருளாதார ரீதியாகவும், வளர்ச்சி ரீதியாகவும், கூட்டணிக் கட்சிகளின் நட்பையும் உடைக்க முடியாது. எனவேதான் உளவியல் ரீதியாகச் சரியாக இல்லாத ராகுல் காந்தி குழம்பிப்போய் இப்படியெல்லாம் பேசி வருகிறார்!”

ராகுல் காந்தி

“மது ஒழிப்பு மாநாடு குறித்த உங்களது விமர்சனத்திற்கு, ‘கூட்டணி உடைந்துவிடும் என நினைத்தவர்கள் மூக்கறு பட்டுக் கூக்குரலிடுகின்றனர்’ என்கிறாரே திருமா?”

“அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களே துணை முதல்வராக வேண்டும் எனப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். எனவே ஆசை தமிழிசைக்கா அல்லது வி.சி.க-வினருக்கா? ஏன் திருமாவளவன் கூடத்தான் துணைப் பிரதமராக வருவேன் என்கிறார். என்னைப்பொறுத்தவரை திருமாவளவன் நடத்துவது டி-அடிக்ஷனுக்கான மாநாடு அல்ல. டிமாண்டுக்கான மாநாடுதான். முதலில் அ.தி.மு.க-வை அழைப்போம் என்றார்கள். பிறகுத் தனது குரலையே மாற்றிக்கொண்டுவிட்டார். நான் மூன்று மாதங்களுக்கு முன்பே, ‘சமூகநீதி உதயநிதிக்கானது அல்ல. எனவே திருமாவளவன் போன்ற தலைவர்களுக்குத் துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்தேன்.”

திருமாவளவன்

“விஜய்யும் வரும் அக்.27-ம் தேதி தனது கட்சியின் மாநாடு நடைபெறும் என அறிவித்திருக்கிறாரே?”

“ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். தேர்தலைச் சந்திக்கலாம். ஆனால் அவர்கள் எந்த விதத்தில் மக்கள் பணியை முன்னெடுத்துச் சொல்லப்போகிறார்கள் என்பதுதான் முக்கியம். தம்பி விஜய் திரைத்துறையில் இருந்து வந்திருக்கிறார். இவருக்கு முன்பு திரைத்துறையிலிருந்து வந்த சிவாஜி முதல் சிரஞ்சீவி வாயிலானவர்கள் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. சமீபத்தில் ஒரு ஜோக் ஒன்று படித்தேன். அதில், ‘காசு வாங்கிக்கொண்டு ஒட்டு போடாதீர்கள் என விஜய் சொல்கிறார். அதற்கு ஒருவர் காசு வாங்கிக்கொண்டு உங்களது படத்திற்கான டிக்கெட்டை பிளாக்கில் விற்பனை செய்யலாமா?’ எனக் கேட்கிறார். இதன் மூலமாக அவர்களுடைய துறையில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையே களைய முடியாத நிலையில் இருக்கிறார்கள். கோடி, கோடியாகச் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் நடிகர் சங்கத்தின் கட்டடத்தைக் கூட கட்ட முடியாத நிலையில் இருக்கிறார்கள். அதற்கு கூட மக்களிடம்தான் பணம் வசூல் செய்வதாக சொல்கிறார்கள். பிறகு எப்படி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப் போகிறார்கள்?”

விஜய், ஆனந்த்

“ஆனால், ‘பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததன் மூலமாகத் திராவிட பாதையில் விஜய் செல்கிறார் என்கிற வயிற்றெரிச்சலில் பா.ஜ.க-வினர் இருக்கிறார்கள்’ என வி.சி.க விமர்சனம் செய்திருக்கிறதே?”

“திருமாவளவனுக்குத் துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என நாங்கள் சொல்வது என்ன வயிற்றெரிச்சலிலா? பொட்டை எடுத்துவிட்டார். பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. இதன் மூலம் தி.மு.க-வுக்குப் போட்டியாக அவர்களின் வாங்கு வங்கியை எடுக்கப்போகிறேன் என அவர் பயணிப்பதாக நான் கேள்விப்படுகிறேன். நீட் தேர்வை எதிர்த்துப் பேசுகிறார். இருமொழி கொள்கை என்கிறார். அவருடைய படங்கள் மட்டும் தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் ஓடுகிறது. உங்கள் தொழிலுக்குப் பல மொழிகள். ஆனால் மாணவர்களுக்கு மட்டும் இருமொழியா? ஆகவே விஜய் குறுகிய பாதைக்குள் சென்று சிக்கிக்கொள்கிறாரோ என்கிற பார்வை இருக்கிறது.

பெரியார் திடலில் விஜய்

சினிமா பிரபலமாக இருப்பது மட்டுமே தலைவராகிவிடுவதற்கான தகுதியில்லை. சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களிலும், காவிரி விவகாரம் போன்ற பிரச்னைகளில் மக்களுக்காக என்ன செய்தீர்கள்? தி.மு.க-வில் இருந்துவிட்டு, பிறகுதான் எம்.ஜி.ஆர்., தனிக்கட்சி ஆரம்பித்தார். ஆகவே மக்களோடு சேர்ந்து வளர வேண்டும். அப்போதுதான் சமூக அக்கறை, மக்களைப் பற்றிய புரிதல் இருக்கும். இல்லாவிட்டால் சினிமாத்தனமாகவே அவர்களுடைய புரிதல் இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.”

” ‘ஒரே நாடு ஒரே தேர்தல் ஆபத்தானது.. கோவையில் நடந்தது தோல்வி என்றால் அவர்கள் ஜெயத்து ஆட்சிக்கு வந்தது வெற்றி அல்ல” என, கமலஹாசன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறாரே?”

“அப்போது மக்கள் நீதி மையத்துக்கு ஒரே தலைவர் இருக்கலாமா? ஏன் சினேகனுக்குக் கொடுக்க வேண்டியது தானே. பிறகு அவர் எப்படி ஜனநாயகம் குறித்துப் பேசலாம்? ரசிகர் கூட்டத்தை வைத்துக்கொண்டு பூத் கமிட்டிக்கு 5 பேரை நியமிக்க முடியவில்லை எனக் கதிகலங்கி நிற்கிறார். இனியாவது சினமா வேறு, அரசியல் வேறு என்பதைக் கமலஹாசன் புரிந்துகொள்ள வேண்டும். அரசியலில் அவர் வெற்றியாளர் இல்லை என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். தி.மு.க-வுடன் கூட்டணி வைத்ததற்குப் பதிலாகத் தனது கட்சியை தி.மு.க-வுடன் இணைத்துவிடலாம். ஒரே தேர்தல் வாரிசு அரசியலுக்கு எதிரானது. மக்களின் வரிப்பணம் வீணாவது தடுக்கப்படும். காங்கிரஸ் ஆட்சியில்தான் மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. ராஜீவ்காந்தி கொலை வழக்கு, ஊழல் வழக்கு என இருமுறை தி.மு.க., அரசு கூட கலைக்கப்பட்டது. பிரதமர் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்கானதாகவே இருக்கும். அவர் காமராஜர் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்!”

கமல்ஹாசன்

“ ‘என் மீதான விமர்சனங்களுக்கு எனது பணிகள் மூலம் பதில் அளிப்பேன்’ என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொல்கிறாரே?”

“தி.மு.க.ம், ஒரு குடும்பத்திற்கான கட்சி இல்லை. பவள விழாவில் ஸ்டாலின், ‘கட்சியின் 25, 50, 75-ம் ஆண்டு விழா கொண்டாடும் போதும் நாம்தான் ஆட்சியிலிருந்தோம். 100-வது ஆண்டிலும் நாம்தான் ஆட்சியில் இருப்போம்’ என்கிறார். 25, 50-ம் ஆண்டில் தலைவராகக் கலைஞர் இருந்தார். 75-வது ஆண்டில் ஸ்டாலின் இருக்கிறார். 100-வது ஆண்டில் உதயநிதியும், அதற்குப் பிறகு இன்ப நிதியும் இருப்பார்கள். அதன்பிறகு எந்த நிதியோ தெரியவில்லை. ஆக தி.மு.க., தொண்டர்கள் உழைத்துக்கொண்டே இருப்பார்கள். ஸ்டாலின் குடும்பம் உயர்ந்துகொண்டே இருக்கும். நீங்களெல்லாம் சமூக நீதி குறித்துப் பேசவே கூடாது. “முதலில், ‘கோரிக்கை வலுத்திருக்கிறது. ஆனால், பழுக்கவில்லை’ என்றார் ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலின்

பிறகு ‘ஏமாற்றம் இருக்காது; மாற்றம் இருக்கும்’ என்றார். இதன் மூலமாகத் தானாகப் பழுக்காமல் பழனி மாணிக்கம், துறை முருகன், சபாநாயகர் அப்பாவு எனப் பலரை அடித்து, அடித்துப் பதவியை பழுக்க வைத்திருக்கிறார்கள். உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என வலியுறுத்தும்படி, கூட்டணிக் கட்சி தலைவர்களை தி.மு.க., வற்புறுத்தியுள்ளது. தந்தை முதல்வர், மகன் துணை முதல்வர் என்றால், எங்கே ஜனநாயகம் இருக்கிறது. இதுதான் சமூக நீதியா? பெண்களுக்கு அமைச்சரவையில் புதிதாக வாய்ப்பு வழங்கவில்லை. ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்று ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜிக்கு அவசர அவசரமாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது தவறான உதாரணம்.”

“நீங்கள் கூட பா.ஜ.க மாநில தலைவர் பதவியை எதிர்பார்த்து இருந்தீர்கள். ஆனால் ஒருங்கிணைப்புக் குழுவில் கூட இடம் கிடைக்கவில்லை என்கிற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“இது ஒரு தவறான பார்வை என்றுதான் சொல்வேன். நான் எந்த பதவியையும் எதிர்பார்க்கவில்லை. கவர்னர் பதவியை விட்டு விட்டு மக்கள் பணிக்காக வந்திருக்கிறேன். ஆனால் என்னுடைய உயரிய நோக்கத்தை சிலர் கொச்சைப் படுத்துகிறார்கள். உணமையிலேயே கவர்னர் பதவியை தியாகம் செய்துவிட்ட மக்கள் பணிக்கு வந்திருக்கிறேன். தொடர்ந்து அதைச் செய்வேன். யாருக்கு எப்போது என்ன பதவி கொடுக்க வேண்டுமோ, அதைச் சரியான நேரத்தில் தலைமை கொடுக்கும்.”

தமிழிசை சௌந்தரராஜன்

“தமிழகத்தில் 1 கோடி பேரை பா.ஜ.க-வில் உறுப்பினராகச் சேர்க்க வேண்டும் எனச் சொல்லப்பட்ட நிலையில் 10 லட்சம் பேர் கூட இணையவில்லை என்கிறார்களே?”

“10 லட்சம் என்பது ஆரோக்கியமான விஷயம்தான். இன்னும் அக்.15 வரை நேரம் இருக்கிறது. விரைவில் இலக்கை அடைவோம்”

ஹெச்.ராஜா

“ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அ.தி.மு.க-வை பா.ஜ.க பக்கம் கொண்டுவருவதற்கான அசைன்மென்ட் கொடுக்கப்பட்டதாகவும் அது நிறைவேறவில்லை என்கிற விமர்சனத்தையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“கூட்டணி குறித்த பணியெல்லாம் கொடுக்கப்படவில்லை. அதிக உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்பதுதான். கூட்டணி குறித்து யோசிப்பதற்கு நேரம் அதிகமாகவே இருக்கிறது.”

நயினார் நாகேந்திரன்

“மைத்திரேயன் வரிசையில் நயினார் போன்றவர்களும் பிற கட்சிகளுக்குச் செல்ல இருப்பதாக விமர்சனம் கிளம்பியிருக்கிறது?”

“உறுப்பினர் சேர்க்கை நடப்பதால் அனைத்து பதவிகளும் காலாவதியாகிவிட்டது. நயினார் சிறப்பாக பணியாற்றி வருகிறார். விஜயதரணிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். மைத்திரேயன் போன்ற சிலரின் நடவடிக்கையால் கட்சிக்குப் பங்கம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது”

நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டபோது

“அன்னபூரணா விவகாரத்தில் வீடியோ வெளியானதற்குப் பின்னால் உட்கட்சி மோதல் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?”

“அதுகுறித்து மாநில தலைவரும், இரண்டு பெண் தலைவர்களும் உரிய விளக்கம் கொடுத்துவிட்டார்கள். மேற்கொண்டு அதில் நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது”

ஜிஎஸ்டி

“ஆனால் ஜிஎஸ்டியால் மக்கள் இன்னும் பல இன்னல்களைச் சந்தித்து வருகிறார்கள் தானே?’

“ஜிஎஸ்டி குறித்து தவறான புரிதல் இருக்கிறது. பலமுனை வரியை ஒரு வாரியாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது இதற்கு முன்னாள் கீரிம் பன்னுக்கு எக்ஸைஸ், வாட் வரி இருந்தது. அப்போது 12.5% வரி செலுத்திக்கொண்டு இருந்தார். தற்போது 5% – தான் செலுத்துகிறார்கள். அதேபோல மைதா, எண்ணெய்க்கான வரியும் கழித்துவிடுகிறோம். இதனால் வரி குறைந்து இருக்கிறது. எனவே வரி குறைப்பு நடவடிக்கை என்றுதான் சொல்ல வேண்டும். ஜிஎஸ்டி கூட்டம் நடத்தப்பட்ட பிறகுதான் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.”

பிரதமர் மோடி

“கல்வித்துறைக்கு போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. ஆளுநர் கோப்புகளில் கையெழுத்துப் போடாததால் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றதே?”

“புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்கிறோம், குழு அமைத்துவிட்டோம் என்று தெரிவித்தார்கள். பிறகு ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கிறார்கள். திட்டத்தைச் செயல்படுத்தாமல் எப்படிப் பணம் கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். இது தவறான கருத்து. புதிய கல்விக்கொள்கை என்பது நமது மாணவர்களின் தரத்தை உலக அரங்கில் உயர்த்துவதுதான் நோக்கம். இதில் தமிழக அரசு அரசியல் செய்வது மாணவர்களின் நலனுக்கு எதிரானது!”

என்கவுண்டர்

“தொடர்ச்சியாக ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்படுவதால் பா.ஜ.க-வில் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என தி.மு.க-வினர் விமர்சனம் செய்கிறார்களே?”

“தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு 16 என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கிறார்கள். குறுகிய காலத்தில் இரண்டு என்கவுண்டர்கள் நடந்திருக்கின்றன. யாரையோ மறைப்பதற்கு, ஒருவேளை ஒரே அடியாகத் தீர்த்துக் கட்டிவிட்டால் பிரச்சினை தீர்ந்து போகும் என நினைக்கிறீர்களா?. இல்லை அந்த ரவுடிகளுக்கு பின்னால் இருக்கும் அரசியல் பின்புலம் கொண்டவர்கள் தெரிந்துவிடுவார்கள் என நினைக்கிறீர்களா?. அனைத்து கட்சியிலும் ரவுடிகள் இருக்கிறார்கள். பா.ஜ.க-வை பொறுத்தவரையில் தவறு இருப்பது தெரிந்தால் நீக்கம் செய்யப்படுவார்கள். எந்த அரசியல் கட்சியிலும் சமூக விரோதிகள் இருக்கக்கூடாது. அரசியல் மக்களின் பாதுகாப்புக்கானது. அவர்களுக்குச் சேவை செய்வதற்கானது”

“பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பின் மூலமாக கூட்டணியில் மாற்றம் ஏற்படும் என்கிற பேச்சுக்களும் கிளம்பியிருக்கிறதே?”

“பிரதமரை சென்று தமிழக முதல்வர் சந்திப்பது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால் அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பு நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றிருக்க வேண்டும். ஏனெனில் அந்த கூட்டத்தில் அனைத்து  நிதி அமைச்சர்களும், செயலாளர்களும் இருப்பார்கள். எனவே தமிழகத்திற்கு கிடைத்தது, கிடைக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விவாதம் செய்திருக்கலாம். ஆனால் தனது சுயநலத்துக்காக தமிழக மக்களை வஞ்சித்துவிட்டார். இந்த சந்திப்பு அரசு ரீதியான சந்திப்பாகவே இருக்கும். மேலும் இதன் மூலமாக பிரதமரின் பலத்தையும், தனது பலவீனத்தையும் முதல்வர் உணர்ந்திருப்பார் என்று நம்புகிறேன். எப்படியோ இது தமிழக மக்களுக்கு நல்லதுதான்!”

முதல்வர் ஸ்டாலின்

“இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகச் சுடப்பட்டு வருகிறார்கள். அதைத் தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிற விமர்சனம் எழுந்திருக்கிறதே?”

“பிரதமர் தூக்கு கயிற்றுக்குப் பக்கத்தில் போனவர்களைக் கூட பாதுகாத்துக் கொண்டுவந்திருக்கிறார். மீன்வளத்துக்கு என்று தனி அமைச்சகத்தைக் கொண்டுவந்திருக்கிறோம். மீனவர்களின் நலன் நிச்சம் பாதுகாக்கப்படும்”

இலங்கை அதிபர் தேர்தல் SriLanka

“இலங்கை புதிய அதிபர் அநுர குமார திசநாய இடதுசாரி என்பதால் சீனாவின் கை ஓங்கும் என்றும், கூடவே இந்தியாவுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்கிற விமர்சனமும் எழுத்திருக்கிறதே?”

“பொருளாதார உதவி, கொரோனா நேரத்தில் கைகொடுத்தது என இந்தியா செய்த உதவியை இலங்கை எளிதில் மறந்துவிட முடியாது. அநுர குமார திசநாய முதலில் நான் இந்தியாவுக்குத்தான் செல்வேன் எனச் சொல்லியிருக்கிறார். போக, போக என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேநேரத்தில் பிரதமரின் ஆளுமை மூலமாக இலங்கையை நட்பு நாடக ஆக்கிக்கொள்வார்கள்”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.