புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜஸ்ரோட்டா பகுதியில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். மேடையில் பேசிக்கொண்டிருந்த அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. லேசாக சரிந்த அவரை மேடையில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஓடிவந்து தாங்கிப் பிடித்தனர். பின்னர் அவரை இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரச் செய்தனர்.
சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பேசிய கார்கே, “அவ்வளவு சீக்கிரம் நான் இறந்துவிட மாட்டேன். மோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்கும் வரை நான் உயிரோடு இருப்பேன். நான் உங்களுக்காக போராடுவேன்” என்று ஆவேசமாக பேசினார். கார்கேவின் இந்த பேச்சுக்கு அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமித்ஷா கூறுகையில், ” கார்கேவின் கருத்து இழிவானதும் வெட்கக்கேடானதுமாகும். கார்கேவின் பேச்சு அவரது வெறுப்பு மற்றும் அச்சத்தை காட்டுகிறது. கார்கேவின் உடல் நலத்தை பொறுத்தவரை, அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். அவர் பல்லாண்டு காலம் வாழட்டும், 2047-ல் விக்ஷித் பாரதம் உருவாகும் வரை வாழட்டும்” என்று கூறியுள்ளார்.