தமிழ்நாடு துணை முதலமைச்சராகத் தனது மகனும், அமைச்சருமான உதயநிதியை நியமித்த கையோடு, அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதில், மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கா. ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டனர். அதேசமயம், இரா. ராஜேந்திரன், கோவி. செழியன், சா.மு. நாசர் மற்றும் கடந்த வாரம் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

இதில், மூத்த அமைச்சர் பொன்முடி கவனித்து வந்த உயர் கல்வித்துறை கோவி.செழியனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக, உயர் கல்வித்துறையை முதல்முறையாகப் பட்டியலின நபருக்கு ஒதுக்கியிருப்பதற்கு ஒருபக்கம் பாராட்டுகள் குவிந்தாலும், சிறையிலிருந்து ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பதா என விமர்சனங்களும் தி.மு.க., மீது குவிகின்றன.
இந்நிலையில், சட்டமன்றத்தில் அமைச்சர்களின் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, ஸ்டாலினின் முதல் மற்றும் அவை முன்னவர் துரைமுருகனின் இரண்டாவது இருக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருக்க, மூன்றாவது இருக்கை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம், மூன்றாவது இருக்கையில் அமர்ந்திருந்த மூத்த அமைச்சர் நேரு நான்காவது இருக்கைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து, 5, 6, 7, 8, 9, 10, 11 ஆகிய இருக்கைகள் முறையே அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், அமைச்சரவையில் புதிதாகச் சேர்க்கப்பட்ட இரா. ராஜேந்திரனுக்கு 19-வது இருக்கையும், செந்தில் பாலாஜிக்கு 21-வது இருக்கையும், கோவி. செழியனுக்கு 27-வது இருக்கையும், சா.மு. நாசருக்கு 29-வது இருக்கையும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும், அமைச்சர்களுக்கான கடைசி நான்கு இருக்கைகள், சி.வி. கணேசன் (32), டி.ஆர்.பி. ராஜா (33), மதிவேந்தன் (34), கயல்விழி (35) ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY