புதுடெல்லி: இமாச்சலப் பிரதேச மலைப் பகுதிகளில் 56 வருடங்களுக்கு முன்பு ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலியான 4 பேரின் உடல்கள் தற்போது ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 7, 1968-இல் சண்டிகரிலிருந்து லே லடாக்குக்கு இந்திய ராணுவத்தின் ஏஎன்-12 வகை விமானம் பயணித்தது. அப்போது அதில் மொத்தம் 102 பேர் பயணித்தனர். ஆனால், இந்த விமானம் ரோத்தங் பாஸ் பகுதியில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 102 பயணிகளும் காணாமல் போயினர். இந்த விபத்தில் பலியானதாக கருதப்பட்ட பலரது உடல்களும் உடனடியாக மீட்கப்படவில்லை. உயிரிழந்தவர்களின் உடல்களைத் தேடும் பணி 2003, 2005, 2006, 2013, 2019 என அவ்வப்போது இந்திய ராணுவத்தால் தொடர்ந்தன.
இதன் பலனாக கடந்த 2019 -ல் ஐந்து உடல்கள் சிதைந்து அழுகிய நிலையில் கிடைத்தன. இதன்பிறகு தற்போது மீண்டும் துவங்கிய மீட்பு பணிக் குழுவினருக்கு மேலும் நான்கு உடல்கள் செப்டம்பர் 29-ல் கிடைத்துள்ளன. இப்பணியை இந்திய ராணுவத்தின் டோக்ரா ஸ்கவுட் பிரிவுடன் இணைந்து திரங்கா மவுண்டன் ரெஸ்க்யு குழு மேற்கொண்டு வருகிறது. இக்குழுவினருக்கு சந்திரபகா எனும் பனி மலைப்பகுதியில் 1968 விமான விபத்தில் பலியான 4 உடல்கள் கிடைத்துள்ளன.
இந்த உடல்களில் மூன்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று, டெல்லியின் மல்கான்சிங் என்பது அத்துடன் இருந்த ஒரு தஸ்தாவேஜ் உதவியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாது உடல் உத்தராகண்டின் சமோலி மாவட்ட கோல்பாதி கிராமத்தின் நாராயண்சிங் என்பவரது ஆகும். இவர் இந்திய ராணுவத்தின் மருத்துவப் பிரிவின் சிப்பாயாக பணியாற்றி வந்துள்ளார். நாரயண்சிங் உடல் மீட்பு குறித்த தகவல் கோல்பாதி கிராமத்தில் வாழும் அவரது மனைவி பஸ்னாதி தேவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது உடலை அடையாளம் கானும் முயற்சி தொடர்கிறது.
நான்காவதாக கிடைத்த உடல், கேரளாவை சேர்ந்த பொறியாளர் தாமஸ் சரண் என்பது தெரிந்துள்ளது. இவரை பற்றி தகவல் அவரது ஊரான இலாந்தூரில் வாழும் தாமஸின் தயார் இலாமாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகவும் நீண்ட தேடுதல் வேட்டையாக இந்த மீட்பு கருதப்படுகிறது. இதன்மூலம், இந்திய ராணுவத்தின் டோக்ரா ஸ்கவுட்ஸ் பிரிவின் சாதனை மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது. கடும் பனிமலையிலும் இந்த பிரிவு மீட்பு பணிகளில் அஞ்சாமல் இறங்கி செய்வதற்கு புகழ் பெற்றது. கடந்த செப்டம்பர் 25-ல் துவங்கிய இந்த மீட்பு பணி இந்த மாதம் அக்டோபர் 10ம் தேதி வரை தொடர உள்ளது.
……..