கோவை: ஈஷா யோகா மையம் குறித்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என கோவை ஈஷா அறக்கட்டளை விளக்கம் அளித்துள்ளது.
ஈஷா அறக்கட்டளை இன்று (அக்.01) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஈஷா யோகா மையம் யாரையும் திருமணம் செய்து கொள்வதற்கோ, துறவறம் மேற்கொள்வதற்கோ கட்டாயப்படுத்துவதோ, உற்சாகப்படுத்தி உந்தி தள்ளவோ செய்வதில்லை. இம்மையம் திருமணம் ஆன, ஆகாத ஆயிரக்கணக்கான மனிதர்கள் மற்றும் பிரம்மச்சாரிய பாதையில் இருக்கும் ஒரு சிலரின் இருப்பிடமாக இருக்கிறது. இந்நிலையில், 2 பெண் பிரம்மச்சாரிகளின் பெற்றோர் கடந்த 8 வருடங்களாக பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்தும், உள்நோக்கம் கொண்ட சிலரின் தூண்டுதலால் போராட்டங்களை நடத்தி தேவையில்லாத சச்சரவுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். பிரம்மச்சாரிய பாதையில் இருக்கும் தனது மகள்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவர்களின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு பிரம்மசாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில்தான் ஈஷா யோகா மையத்தில் தங்கியுள்ளோம் என்று தெளிவுபடுத்தியுள்ளனர். சமீபத்தில் காமராஜ் ஈஷா யோக மையம் வந்து, தன் மகள்களை சந்தித்த சிசிடிவி காட்சிகளும் ஆதாரங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், உறுதியாக உண்மை வெல்லும் என்று நம்புகிறோம்.
கடந்த 2016-ம் ஆண்டு இதே காமராஜ் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி, கோவை மாவட்ட நீதிபதிகள் அடங்கிய குழு ஈஷா யோகா மையத்தில் மா மதி, மா மாயு ஆகியோரை சந்தித்து விசாரித்தனர். அவர்களின் அறிக்கையின் படி தீர்ப்பு அளிக்கப்பட்டு அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புவதில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என அதில் கூறப்பட்டுள்ளது.