புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் ரஃபேல் போர் விமானங்களை இந்தியா ஏற்கெனவே வாங்கியுள்ளது. தற்போது இந்திய விமானப்படை யில் 36 ரஃபேல் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில், 2 நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விரைவில் செல்லவுள்ளார். அப்போதுஇந்திய கடற்படைக்கு ரஃபேல்விமானங்களை விற்பனை செய்வது தொடர்பான இறுதி அறிக்கையை பிரான்ஸ், இந்தியாவிடம் சமர்ப்பிக்க உள்ளது. அதனை பரிசீலித்து இந்த நிதியாண்டுக்குள் இந்த ஒப்பந்தத்தை நிறைவு செய்யமத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் கடற்படைக்கான ரஃபேல் விமானங்களின் விலை யைக் குறைப்பது தொடர்பாக இந்தியா ஏற்கெனவே பேசியிருந்தது. தற்போது விமானங்களின் விலையைக் குறைக்க பிரான்ஸ் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. விமானங்களின் விலைக் குறைப்பு நடவடிக்கை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
இந்திய கடற்படையில் உள்ள ரஷ்யாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மிக்-29கே ரக விமானங்களுக்கு மாற்றாக ரஃபேல் விமானங்களை சேர்க்கவே இந்த நடவடிக்கையை இந்திய அரசு எடுத்து வருகிறது.