பெங்களூரு: லண்டனை தலைமையிடமாகக் கொண்டு, ‘ராயல் ஆஸ்டிரான மிக்கல் சொசைட்டி’ செயல்பட்டு வருகிறது. இதன் ‘மந்த்திலி நோட்டீசஸ் / லெட்டர்ஸ் என்ற மாதஇதழில் இந்திய ஆராய்ச்சியாளர் கள் கே.துர்கா பிரசாத் மற்றும் ஜி.அம்பிலி ஆகியோர் ஆய்வுகட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ள னர். அதில் கரோனா ஊரடங்கு காலத்தில் நிலவில் ஏற்பட்ட வெப்ப நிலை மாற்றங்கள் குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து ‘பிசிக்கல் ரிசர்ச் லெபாரட்டரி’ பிரிவின் இயக்குநர் அனில் பரத்வாஜ் கூறியதாவது: எங்கள் குழு நடத்திய மிக முக்கியமான ஆராய்ச்சி இது.இந்த ஆராய்ச்சி தனித்துவமானது. கடந்த 2020-ம் ஆண்டில் கரோனா பெருந்தொற்று ஏற்பட்டது. உலகளவில் ஏப்ரல் – மே மாதங்களில் கடுமையான ஊரடங்கு போடப்பட்டதால், நிலவின் வெப்ப நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. எங்கள் குழுவினர் நிலவில் 2 பகுதிகளில் மொத்தம் 6 இடங்களை தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்து வந்தனர். அதன்படி, ஓசினஸ் புரோசெலாரம் பகுதியின் 2 இடங்கள், மேரி செரினிடாடிஸ், மேரி இம்பிரியம், மேரி டிராங்குலிடாடிஸ், மேரி கிரிசியம் ஆகிய பகுதிகளில் எங்கள் குழுவினர் ஆய்வு நடத்தினர்.
இந்தப் பகுதிகளில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் கடந்த 2023-ம் ஆண்டு வரையில் ஆய்வுநடத்தப்பட்டது. இதற்காக நாசாவின் ‘லூனார் ரிகன்னைசான்ஸ் ஆர்பிட்டர்’ மூலம் கிடைத்த தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 2020-ம் ஆண்டு ஏப்ரல், மேமாதங்களில் நிலவில் 8 முதல் 10 கெல்வின் (சர்வதேச வெப்பநிலைக்கான அடிப்படை அலகு)அளவுக்கு வெப்ப நிலை குறைந்துள்ளது தெரிய வந்தது. இதே மாதங்களில் மற்ற ஆண்டுகளில் இருந்த வெப்ப நிலையை ஒப்பிட்டு பார்த்த போது தெரியவந்தது.
உண்மையில் நிலவின் வெப்ப நிலை குறித்த 12 ஆண்டு தரவுகளை ஆய்வு செய்தோம். எனினும்7 ஆண்டு தரவுகளை மட்டும்எங்கள் ஆய்வுக்குப் பயன்படுத்தினோம். அதாவது ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன் 3 ஆண்டுகள், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 3 ஆண்டுகள் என ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். ஊரடங்கின் போதும் பூமியில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சின் அளவு குறைந்ததே இதற்கு காரணம். ஊரடங்கின் போது மனிதநடமாட்டம் முற்றிலும் பூமியில் குறைந்து விட்டது. அதனால் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம், காற்றில் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் நுண்துகள்களின் அளவுகணிசமாக அந்த காலக் கட்டத்தில் குறைந்திருந்தது. அதனால், பூமியின் மேற்பரப்பில் இருந்து உமிழப்படும் வெப்ப அளவு குறைந்து காணப்பட்டது.
பூமியின் கதிர்வீச்சின் அளவை பெருக்கி தரும் வேலையை நிலவு செய்கிறது. இதன் மூலம் பூமியில் மனிதர்களின் நடவடிக்கைகள் நமது கிரகத்துக்கு அருகில் உள்ள விண்வெளி பொருட்களை எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது தெரிய வந்துள்ளது. எனினும், இதுகுறித்து ஆராய கூடுதல் தரவுகள் தேவைப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.