ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான இறுதி மற்றும் 3-வது கட்ட தேர்தலில் 65.65 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு3 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்ஆணையம் அறிவித்தது. முதல்கட்டமாக கடந்த செப்டம்பர் 18-ம் தேதி 24 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக கடந்த 25-ம் தேதி 26 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், 3-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் நேற்று 40 தொகுதிகளுக்கு நடைபெற்றது. தேர்தல் களத்தில் 17 முன்னாள் அமைச்சர்கள், 8 முன்னாள் எம்எல்ஏக்கள், 4 முன்னாள் அரசு அதிகாரிகள் என மொத்தம் 415 வேட்பாளர்கள் உள்ளனர். 39.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 5,060 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்தல் பணியில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிமாலை 6 மணி வரை நடைபெற்றது. பல்வேறு வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து, ஆர்வத்துடன் வாக்களித்தனர். முதல்முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோர் மிகுந்த உற்சாகத்துடன் வாக்களித்தனர். வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார், ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் ராணுவ வீரர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
3-வது கட்ட தேர்தலில் 65.65 சதவீத வாக்குகள்பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு ராணுவ வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை வரும் 8-ம் தேதி நடக்க உள்ளது. அன்று பகல் 11 மணி முதல் முடிவுகள் வரத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.