திருப்பூர்: காஞ்சிபுரம் சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பூரில் இன்று செல்போன்களை உடைத்து போராட்டம் நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்காததுடன், ஊதிய உயர்வு குறித்து பேசுவதற்கும் நிர்வாகம் முன்வரவில்லை. இதைக் கண்டித்து அந்நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பூரில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது.
சிஐடியு தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் குமரன் நினைவகத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற சிஐடியு தொழிற்சங்கத்தினர், மத்திய தபால் நிலையம் முன்பாக சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாம்சங் நிறுவனத்தின் செல்போன்களை சாலையில் போட்டு உடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். முழக்கங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
இந்த மறியல் போராட்டத்தில் சிஐடியு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ரங்கராஜ், சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் குமார், சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் சம்பத், முத்துச்சாமி, சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் பாலன், உன்னிகிருஷ்ணன், அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்கள் 400 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் விவரம்: காஞ்சியில் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் சாலை மறியல்; திடீரென திரண்டதால் பரபரப்பு – 400 பேர் கைது