டேட்டிங் செல்ல விடுமுறை; சம்பளமும் உண்டு… எந்த நாட்டில் தெரியுமா?

பாங்காக்,

அரசு அல்லது தனியார் அலுவலகங்களில் வேலைக்கு செல்பவர்களின் தேவைக்காக விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மருத்துவ விடுப்பு, பேறுகால விடுப்பு உள்ளிட்டவை சில நிறுவனங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. சில நிறுவனங்களில் சுற்றுலா செல்ல கூட விடுப்பு அளிக்கப்படுகிறது. இந்த சூழலில், தாய்லாந்து நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு புதிய சலுகையை அளித்து ஆச்சரியப்படுத்தி உள்ளது.

ஒயிட்லைன் குரூப் என்ற இந்நிறுவனம், பணியாற்றும் ஊழியர்களின் நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்ளும் வகையில் இந்த சலுகையை அறிவித்து உள்ளது. நிறுவன ஊழியர்களின் நலனை மேம்படுத்தும் முயற்சியாக, பணியாளர்கள் டேட்டிங் செல்வதற்கு வசதியாக அதற்கு டிண்டர் லீவ் என்ற பெயரில், விடுமுறை எடுத்து கொள்ள அனுமதி அளிக்கிறது.

இதன்படி ஆண், பெண் ஊழியர்கள், அவர்கள் விரும்பிய நபர்களுடன் டேட்டிங் செல்லலாம். ஊழியர்களுக்கு, டிண்டர் கோல்டு மற்றும் டிண்டர் பிளாட்டினம் போன்ற சலுகை அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு உள்ளன. எனினும், எத்தனை நாளைக்கு விடுமுறை என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

டிண்டர் என்ற டேட்டிங் செயலியின் வழியே காதல் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ளும் ஊழியர்கள், இந்த விடுமுறையை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், 2024-ம் ஆண்டு ஜூலை 9-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரையிலான நாட்களில் பணியில் சேர்ந்து, பயிற்சி காலத்திற்கான வேலையை நிறைவு செய்தவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படுகிறது.

அதுவும் நடப்பு ஆண்டில் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான நாட்களில் இந்த சலுகை அளிக்கப்படுகிறது. அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்த பெண் பணியாளர் ஒருவர், என்னால் டேட்டிங் செல்ல முடியாத அளவுக்கு பரபரப்பாக வேலை செய்து வருகிறேன் என சக பணியாளரிடம் வெறுப்பாக கூறியுள்ளார். இந்த விசயம் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்தே இந்த முடிவை நிறுவனம் எடுத்துள்ளது என கூறப்படுகிறது. இனி அந்த பெண் பணியாளர், பகல் இரவு என விடுமுறை எடுத்து கொண்டு டிண்டரில் உள்ள ஜோடியுடன் வெளியே செல்லலாம்.

பாங்காங் நகரை தலைமையிடம் என கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் 200 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பலரும் இந்த சலுகையை பற்றி பரபரப்பாக பேசி வருகின்றனர். நாம் பணியாற்றும் நிறுவனத்தில் இந்த சலுகை எல்லாம் எப்போது வரும்? என வேறு நிறுவனங்களில் பணியாற்றி வரும் அவர்களுடைய நண்பர்கள் சலித்து கொள்கின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.