ஒவ்வோர் ஆண்டும் நான்கு நவராத்திரிகள் உண்டு. அவற்றில் மிகவும் புகழ்வாய்ந்தது புரட்டாசி மாதம் வரும் சாரதா நவராத்திரி. இந்த நவராத்திரியில்தான் வீடுதோறும் கொலுவைத்து வழிபாடு செய்வது வழக்கம்.
பொதுவாக மகாளய அமாவாசை அன்றே கலசம் வைத்து கொலு அடுக்கிவிடுவது சிலர் வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மகாளய அமாவாசை நாளில் கலசம் வைக்கலாமா என்கிற குழப்பம் பலருக்கும் உள்ளது. காரணம் அக்டோபர் – 2 ம் தேதி வரும் அமாவாசை நாள் கரிநாளாக அமைகிறது, கரிநாளில் கலசம் வைத்து நவராத்திரி வழிபாட்டைத் தொடங்கலாமா என்ற சந்தேகம் உள்ளது. இதுகுறித்து சிவஶ்ரீ சண்முக சிவாசார்யரிடம் கேட்டோம்.
“பொதுவாக நவராத்திரி என்றாலே பிரதமையில் தொடங்குவது என்பது கணக்கு. லலிதா சகஸ்ரநாமத்தில் பிரதிபன் முக்ய ராகாந்த திதி மண்டல பூஜிதாயை நமஹ என்று அம்பாள் போற்றப்படுகிறாள். எனவே அமாவாசை முடிந்த மறுநாள் நவராத்திரி வழிபாட்டைத் தொடங்கிவிடவேண்டும். அதற்கு முன்னேற்பாடாக கலசம் வைத்து கொலுவைப்பது வழக்கம். பொதுவாக இந்தக் கலசம் வைப்பதைப் பலரும் அமாவாசை நாளிலேயே வைத்துவிடுவார்கள்.
இந்த ஆண்டு நாள் முழுவதும் அமாவாசை திதி உள்ளது. எனவே பித்ரு வழிபாடுகள் செய்ய இந்த நாள் ஏற்றநாள். ஆனாலும் இது கரிநாளாக அமைவதால் கொலுவைக்கக் கலசம் வைக்கலாமா என்று சிலர் கேட்கிறார்கள்.
பொதுவாக தெய்வ காரியங்களில் ஓர் அளவுக்கு மேல் நேரம் காலம் பார்க்க வேண்டியதில்லை. ஆனால் நல்ல நேரத்தில் தொடங்க வேண்டும் என்று விரும்புபவர்கள், மறுநாள் கலசம் வைப்பதே சிறந்தது. வியாழக்கிழமை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து கலசம் வைத்துப் பின் கொலுவை அடுக்கிவிடலாம். இப்படிச் செய்வதன் மூலம் தேவையற்ற சந்தேகங்களையும் சலனங்களையும் தவிர்த்துவிடலாம்.
நவராத்திரியின் ஒன்பது நாள்களும் குறைந்தபட்சம் மாலை வேளையில் வீட்டில் விளக்கேற்றி அம்பிகையின் துதிகளைப் பாடிவந்தால் சகல அம்பிகையின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்” என்றார் சிவாசார்யர்.