இயக்குநர் சகாயநாதன் இயக்கத்தில் `செல்ல குட்டி’ எனும் திரைப்படம் தயாராகியிருக்கிறது. புதுமுகங்கள் டாக்டர்.டிட்டோ மற்றும் மகேஷ் நாயகர்களாகவும், புதுமுக நடிகைகள் தீபிக்ஷா, சிம்ரன் ஆகியோர் நாயகிகளாகவும் நடித்திருக்கிறார்கள். 4-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய இயக்குநர் பேரரசு, “துணை முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். கலை தொடர்பான குடும்பத்திலிருந்து, நடிகராக பயணித்தவர் துணை முதல்வராக வந்திருப்பது மகிழ்ச்சி. சிறு படங்களை எப்படி காப்பாற்றுவது, சிறு படங்களுக்கும் தியேட்டருக்கு மக்களை எப்படி வரவைப்பது என தயாரிப்பாளர் சங்கம் இயக்குநர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர் என ஒவ்வொரு சங்கமாக அழைத்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது தொடர்பாக இந்த நிகழ்ச்சியிலும் பேசப்பட்டது.
இந்தத் திரைத் துறையிலிருந்து ஒருவர் துணை முதல்வராக தேர்வாகியிருக்கிறார். எனவே, அவரிடம் இது குறித்து நாம் பேசவேண்டும். எம்.ஜி.ஆர் காலத்திலும், ரஜினி காலத்திலும் ஏன் 20 வருடங்களுக்கு முன்புவரை, திரைப்படம் என்பது ஏழைக்களுக்கான சாதனம். உழைக்கும் வர்க்கம் களைப்பை தீர்க்க போகும் இடம்தான் தியேட்டர். ஆனால் இன்று அந்த நிலை மாறியிருக்கிறது. இன்று டிக்கெட் விலை, பார்க்கிங் விலை என எதுவும் சராசரி மக்களுக்கானதாக இல்லை.
எனவே, பணக்காரர்கள், ஏழைகள், நடுத்தர மக்கள் என அவரவர்கள் பார்க்க தனித்தனி தியேட்டர் வேண்டும். அதனால், நம் துறையிலிருந்து துணை முதல்வராகியிருக்கும் ஒருவர் சினிமாவுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அதாவது, ஏழைகள் சாப்பிட அம்மா உணவகம் கொண்டு வந்தது போல, ஏழைகள் பார்ப்பதற்காக திரை அரங்கை அரசே கட்டவேண்டும். இதுதான் தீர்வே தவிர, டிக்கெட் விலை குறைக்கவோ, ஜி.எஸ்.டி குறைக்கவோ, வரியை குறைக்கவோ கூற முடியாது. எனவே ஏழைக்களுக்கான திரை அரங்கை அரசு உருவாக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…