பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் ராஜகோபுரம் சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடு பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில். இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2023 ஜனவரி 27-ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
கும்பாபிஷேகம் நடந்து ஒன்றரை ஆண்டுகளே ஆன நிலையில் தற்போது ராஜகோபுரத்தின் உச்சியில் ஒரு பகுதி உடைந்து சேதமடைந்துள்ளது. இதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கோபுரத்தை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கோயில் அதிகாரிகள் கூறும்போது, “ராஜகோபுரத்தில் உச்சியில் ஒரு பகுதி சேதமானது உண்மை தான். அப்பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோபுரம் சேதமானதால் பரிகார பூஜை மற்றும் கோபுர சீரமைப்புக்கு பின் சிறிய அளவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம். கோயில் கோபுரம் சேதம் குறித்து பக்தர்கள் கவலைப்பட வேண்டாம். கோபுரம் சீரமைக்கப்பட உள்ளது.” என்றனர்.