பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த நிதிஷ் குமார்

பாட்னா,

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில், பீகார் எல்லை அருகே உள்ள தடுப்பணையில் இருந்து லட்சக்கணக்கான கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், பீகார் மாநிலத்தின் 16 மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி நிதிஷ் குமார், ஹெலிகாப்டரில் சென்று நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பீகார் மாநில அரசின் நீர்வளத்துறை மந்திரி விஜய் குமார் சவுத்ரி, பேரிடர் மேலாண்மை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரத்ய அம்ரித் ஆகியோர் உடனிருந்தனர்.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள கண்டக் மற்றும் கோசி ஆகிய ஆறுகளின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கான நிவாரணப் பணிகளை நிதிஷ் குமார் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், படகு மூலம் செல்ல முடியாத இடங்களுக்கு இந்திய விமானப் படையின் உதவியுடன் ஹெலிகாப்டர் மூலம் சென்று நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.