புரட்டாசி மாதத்தின் விசேஷங்களில் ஒன்று மஹாளய அமாவாசை. புரட்டாசி மாதத்தின் முதல் 15 நாள்கள் மகாளயபட்சம் என்று போற்றப்படுகிறது. தட்சிணாயினப் புண்ணியகாலமான ஆடி மாத அமாவாசை அன்று பித்ருக்கள் தங்கள் உலகங்களில் இருந்து புறப்பட்டு புரட்டாசி மாதம் பூவுலகுக்கு வந்து சேர்வார்கள்.
புரட்டாசி மாதம் அமாவாசை தினம் வரை அவர் நம்மோடு தங்கியிருப்பதாக ஐதிகம். எனவேதான் அந்தப் பதினைந்து நாள்களும் முன்னோர்கள் வழிபாடு மேற்கொள்ளவேண்டும் என்று நம் முன்னோர்கள் கருதினர்.
ஆனால் எல்லோராலும் பதினைந்து நாள்களும் வழிபாடு செய்ய இயலாது. என்றாலும் குறைந்தபட்சம் மகாளய அமாவாசை தினத்திலாவது முன்னோர் வழிபாடு செய்ய வேண்டியது அவசியம்.
வழிபடுவது எப்படி?
நாளை மகாள அமாவாசை வருகிறது. நாள் முழுவதும் அமாவாசை திதி உள்ளது. எனவே நாளை உச்சி வேளைக்கு முன் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது விசேஷம். காலையில் எழுந்து குளித்து நீராடிப் பின் தர்ப்பணம் செய்து பிறகு வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்வது அவசியம்.
நதிக்கரைகளில் சமுத்திரக் கரைகளில் மகாளய அமாவாசை தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பு. இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யலாம். எள்ளும் தண்ணீரும் எடுத்துக்கொண்டு முன்னோர்களின் பெயரைச் சொல்லி விடுவதன் மூலம் முன்னோர்களை எளிதாகத் திருப்தி செய்ய முடியும். மகாளய அமாவாசை நாளில் செய்யும் தர்ப்பணம் பித்ருக்களின் ஆசியைப் பெற்றுத்தரும். ஆண்டுதோறும் முன்னோர் வழிபாடு செய்யாதவர்கள்கூட இந்த நாளில் செய்கிறபோது ஆண்டுமுழுவதும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும்.
கவனிக்க வேண்டியவை
பெரும்பாலும் அமாவாசை நாள்களில் காலையில் கோலம் போடும் வழக்கம் பலர் வீடுகளில் இல்லை. அதேபோன்று தர்ப்பணம் செய்து முடிக்கும்வரை வீட்டில் விளக்கேற்றுவதும் கூடாது. தர்ப்பணம் முடிந்தபின்பு திருநீறு குங்குமம் வைத்துக்கொண்டு விளக்கேற்றி சுவாமியை வழிபடவேண்டும். அவரவர் வழக்கப்படிப் படையல் போடவேண்டியது அவசியம். குறிப்பாக உங்கள் குலதெய்வத்தை நினைக்க வேண்டும். குலதெய்வம் எந்த ஊரில் இருந்தாலும் அமாவாசை நாளில் அதை நினைத்து வணங்கினால் அது மாபெரும் ஆசீர்வாதமாக அமையும்.
பசு மாடுகளுக்கு அகத்திக்கீரை கொடுப்பது, ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வது ஆகியன மிகுந்த நற்பலன்களைக் கொடுக்கும். அரிசி, வாழைக்காய் தானம் கொடுத்து தர்ப்பணம் செய்பவர்களுக்கு வாழ்வில் உணவுக்குப் பஞ்சமே ஏற்படாது என்பது நம்பிக்கை.
மறந்து போனவனுக்கு மகாளயம்
ஆண்டுக்கு ஒருமுறை இறந்துபோன பெற்றோருக்குத் திதி கொடுப்பது அவசியம். ஆனால் பெற்றோர் இறந்த நாள், திதி அறியாதவர்கள் மகாளய அமாவாசை நாளில் கொடுக்கலாம். அதனால்தான் மறந்துபோனவனுக்கு மகாளயம் என்கிறார்கள் முன்னோர்கள். மகாளய அமாவாசை நாளில் செய்யும் முன்னோர் வழிபாடு 21 தலைமுறை பித்ருக்களுக்கு வழிகாட்டும். அவர்கள் நற்கதி அடைவார்கள் என்கிறது சாஸ்திரம்.
குறிப்பாக இயற்கைக்கு மாறாக இறந்துபோனவர்களின் ஆன்மா கடைத்தேற மகாளய அமாவாசை வழிபாடு மிகவும் உதவும். புரட்டாசி அமாவாசையில் செய்யும் தர்ப்பணம் அவர்களுக்குத் திருப்தி அளித்து கடைத்தேற உதவும்.
பித்ருக்கள் தரும் ஆசி
பித்ருக்களின் ஆசி ஒருவனுக்கு இருந்தால் அவனைத் தீவினைகள் அண்டாது. தீர்க்க ஆயுளும் செல்வச் செழிப்பும் சந்தோஷ வாழ்வும் கிடைக்கும். மாறாக பித்ருக்களை மறந்தவர்களுக்கு சாபம் வாய்க்கும். அதுவே வாழ்வில் சுபிட்சமில்லாத நிலை, அமைதியற்ற வாழ்க்கை, சுபகாரியத் தடை ஆகியவற்றை ஏற்படுத்தும். பித்ருக்களைத் திருப்தி செய்வது கடினமான காரியம் அல்ல.
இரண்டு நிமிடங்களில் எள்ளும் தண்ணீரும் அவர்களின் பெயரைச் சொல்லி விட்டாலே மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். கிரகங்கள்கூடத் தரமுடியாத ஆசீர்வாதங்களை நம் பித்ருக்கள் நமக்கு அருள முடியும். எனவே தவறாமல் நாளை மகாளய அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு செய்து சகல நன்மைகளையும் அடையலாம்.