கொல்கத்தா: பணியிடத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மேற்கு வங்கத்தின் பயிற்சி இளநிலை மருத்துவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மீண்டும் ‘முழு பணிப் புறக்கணிப்பு’ போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இளநிலை பயிற்சி மருத்துவர்கள் சங்கங்கள் மேற்கொண்ட 8 மணி நேர ஆலோசனைக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. மருத்துவமனையின் பாதுகாப்பு, மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவர்களை அச்சுறுத்தும் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை முன்வைத்து மீண்டும் இளநிலை பயிற்சி மருத்துவர்கள் போராடுகின்றனர்.
இது குறித்து மேற்கு வங்க இளநிலை பயிற்சி மருத்துவர்கள் முன்னணி வெளியிட்ட அறிக்கையில், “இன்று முதல் மீண்டும் முழு பணிப் புறக்கணிப்பில் ஈடுபட நாங்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளோம். அரசாங்கத்திடமிருந்து எங்களின் பாதுகாப்பு, நோயாளிகளுக்கான சேவைகளை தரம் உயர்த்தல், மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாக தெளிவான, உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் வரை முழு வீச்சில் போராட்டத்தை நடத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களில் ஒருவரான அனிகேட் மஹதோ ஊடகப் பேட்டியில், “மாநில அரசிடமிருந்து எங்களுக்கு எவ்விதமான நேர்மறையான சமிக்ஞையும் கிடைக்கவில்லை. இன்று எங்கள் போராட்டம் 52வது நாளை எட்டியுள்ளது. ஆனால் இன்றும் கூட மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுகிறது. இப்போதைக்கு எங்களிடம் இரண்டே வாய்ப்புதான் உள்ளன. ஒன்று போராடுவது; இரண்டாவது பணிக்குத் திரும்புவது. மாநில அரசிடமிருந்து தெளிவான நடவடிக்கைக்கான உத்தரவாதம் தென்படும்வரை இந்த முழு வீச்சுப் போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளோம்” என்றார்.
போராட்ட பின்னணி: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதுதொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.
இந்த கொடூர கொலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது.
கொல்கத்தா பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கோரி பயிற்சி மருத்துவர்கள் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். மேற்கு வங்க அரசின் கோரிக்கையை ஏற்று கடந்த 19-ம் தேதி போராட்டம் கைவிடப்பட்டு பயிற்சி மருத்துவர்கள் பணிக்கு திரும்பினர்.
இந்தச் சூழலில் கொல்கத்தா புறநகர் பகுதியான காமர்ஹத்தி பகுதியில் உள்ள சாகோர் தத்தா அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஒரு நோயாளி உயிரிழந்தார். அந்த நோயாளியின் உறவினர்கள், மருத்துவர் மற்றும் செவிலியர்களை தாக்கினர். இதைத் தொடர்ந்து கொல்கத்தா உட்பட மேற்கு வங்கம் முழுவதும் மருத்துவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர். இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மேற்கு வங்க இளநிலை பயிற்சி மருத்துவர்கள் மீண்டும் ‘முழு பணிப் புறக்கணிப்பு’ போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.