புதுடெல்லி: அரசியல் சாசன 6-வது அட்டவணை அந்தஸ்து கோரி லடாக்கில் இருந்து டெல்லிக்கு பாத யாத்திரையாக வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், அவரது ஆதரவாளர்கள் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
வட கிழக்கு மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு சுய நிர்வாக உரிமை வழங்கப்பட்டுள்ளதைப் போல லடாக்குக்கும் வழங்க வேண்டும், லடாக்குக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், தற்போது ஒரு மக்களவைத் தொகுதி மட்டுமே உள்ள நிலையில், லே மற்றும் கார்கில் என 2 நாடாளுமன்றத் தொகுதிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லடாக்கைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுமார் 120 பேர் ஒரு மாதத்துக்கு முன்பு லே நகரில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டனர்.
நேற்று இரவு டெல்லி எல்லை வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். தடை உத்தரவுகளை மீறியதற்காக சோனம் வாங்சுக் மற்றும் அவருடன் வந்தவர்கள் டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு, பவானா, நரேலா இண்டஸ்ட்ரியல் ஏரியா மற்றும் அலிபூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) பிரிவு 163 [ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதைத் தடைசெய்கிறது] தேசிய தலைநகரில் அமல்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களைத் திரும்பிச் செல்லும்படி நாங்கள் சமாதானப்படுத்த முயற்சித்தோம். ஆனால் அவர்கள் பிடிவாதமாக இருந்தனர்,” என்று அந்த அதிகாரி கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 30 பெண்கள் இருப்பதாகவும், அவர்கள் ஆண் கைதிகளுடன் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் லடாக் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஹனீபா தெரிவித்தார். “லடாக்கைச் சேர்ந்த பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெவ்வேறு காவல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரை நான் நேற்று இரவும் இன்று அதிகாலையும் சந்தித்தேன்.
சிங்கு எல்லை அணிவகுப்பில் சேர்ந்து கொள்வதற்காக கார்கிலில் இருந்து வந்த சுமார் 60-70 பேரும் டெல்லி காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். சுமார் 30 பெண்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆண் கைதிகள் இருந்த இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்” என்று அவர் கூறினார். இருப்பினும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்யவில்லை என்று திங்கள்கிழமை இரவு டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சோனம் வாங்சுக் மற்றும் நூற்றுக்கணக்கான லடாக்கியர்கள் சுற்றுச்சூழல் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளுக்காக அமைதியான முறையில் அணிவகுத்துச் சென்ற நிலையில் அவர்களை சிறை பிடித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
லடாக்கின் எதிர்காலத்திற்காகக் குரல் கொடுக்கும் முதியவர்கள் ஏன் டெல்லியின் எல்லையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? பிரதமர் மோடிக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். விவசாயிகளைப் போல், இந்த ‘சக்கரவியூகம்’ உடைந்து விடும். உங்கள் ஆணவமும் உடைந்து விடும். நீங்கள் லடாக்கின் குரலைக் கேட்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.