பெய்ரூட்: தெற்கு லெபனானின் பகுதிகளுக்குள் தரைவழித் தாக்குதலுக்காக தங்களின் படைகள் நுழைந்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், அதனை ஹிஸ்புல்லா இயக்கத்தினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா வெள்ளிக்கிழமை கொல்லப்பட்ட நிலையில், லெபனானின் சில குறிப்பிட்ட பகுதிகளைக் குறிவைத்து தரைவழித் தாக்குதலைத் தொடங்கிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் நீண்ட விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இஸ்ரேல் அரசியல் குழுவின் முடிவுக்கு இணங்க, தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத இலக்குகள் குறித்த உளவுத் துறை அளித்த நம்பத் தகுந்த தகவலின் அடிப்படையில் துல்லியமான இலக்குகளைக் குறிவைத்து, வரையறுக்கப்பட்ட் பகுதியில், தரைவழித் தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் தொடங்கியுள்ளது. இந்தத் தரைவழித் தாக்குதலில் அண்மையில் ராணுவப் பயிற்சி அளித்து தயார்படுத்தப்பட்ட வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.
எல்லையோர லெபனானியர்கள் வெளியே உத்தரவு: இதனிடையே, எல்லையோரங்களில் உள்ள லெபனான் சமூகத்தினரை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. தெற்கு லெபனானுக்குள் தரைவழியாக இஸ்ரேல் ராணுவம் அனுப்பப்பட்ட சில மணிநேரங்களுக்கு பின்பு அந்த உத்தரவு வெளியானது. இஸ்ரேல் கூறும் தரைவழி தாக்குதலுக்கு முன்பு, லெபனான் மீது அந்நாட்டு நடத்திய தீவிரமான தாக்குதலில் கடந்த இரண்டு வாரங்களில் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐ.நா உரிமைகள் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்: மோதல் தீவிரமடைவதைத் தடுக்க, தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பார்ஸ் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “நாங்கள் கவலைக்குரிய தகவல்களை பெறுவதால் இஸ்ரேல் தனது தரைவழி தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். லெபனானிலும், காசாவிலும் போர் நிறுத்தங்கள் அவசியம்” என்று தெரிவித்துள்ளார். அதேபோல், இஸ்ரேல் பிராந்தியத்துக்குள் ஹிஸ்புல்லாக்கள் நடத்திய ராக்கெட் தாக்குதலையும் ஸ்பெயின் கண்டித்துள்ளது.
இஸ்ரேல் தரைவழி தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்: லெபனானில் இஸ்ரேலின் பெரிய அளவிலான தரைவழி தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. உரிமைகள் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் லிஸ் த்ரோசெல்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஹிஸ்புல்லாக்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஆயுதமேந்தி மோதல் உச்சமடைந்து வரும் நிலையில், ஏற்கெனவே பொதுமக்களுக்கு பெரும் விளைவுகளைச் சந்தித்து வருகின்றனர். லெபனான் மீதான இஸ்ரேலின் பெரிய அளவிலான தரைவழி தாக்குதல் பெரும் விளைவுகளுக்கு மட்டுமே வழிவகுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, லெபனானின் மீதான வான்வழித் தாக்குதலையும் இஸ்ரேல் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசாவில் குறைந்தது 31 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்லது. இது குறித்து பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் கூறுகையில், “இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் முகாம்களில் இருந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். மற்றொரு தாக்குதல், காசா நகருக்கு அருகில் உள்ள டுஃப்பாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீன குடும்பங்கள் வாழ்ந்த பள்ளியில் நடத்தப்பட்டது. இதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்” என்று தெரிவித்தனர்.
இஸ்ரேல் தாக்குதலில் 41,638 பேர் உயிரிழப்பு: இதனிடையே, கடந்த ஆண்டு அக்.7 முதல் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41,638 ஆக உயர்ந்துள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர் தொடங்கியதில் இருந்து 96,460 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.