ஆன்லைன் மோசடி கும்பல்கள் புதிய புதிய வழிகளில் பொதுமக்களிடம் தங்களது வேலையைக் காட்டி வருகின்றன. சமீபகாலமாகப் பொதுமக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களை யாரிடமும் பேசவிடாமல் தடுத்து, அவர்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை மொத்தமாகப் பிடுங்கும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றன.
இம்மோசடி கும்பலிடம் நன்றாகப் படித்தவர்கள் கூட ஏமாந்து விடுகின்றனர். சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு, போலீஸார் எனப் பயமுறுத்தி பணத்தைப் பறித்து விடுகின்றனர். டெல்லியைச் சேர்ந்த எஸ்.பி. ஓஸ்வால் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் வரதனுக்கு (82) நேற்று முன்தினம் ஒருவர் போன் செய்து பேசியிருக்கிறார். போனில் 9வது நம்பரை அழுத்தவில்லையெனில் உங்களது போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும் என்று அந்த நபர் மிரட்டியிருக்கிறார். இதனால் வர்தன் தனது போனில் 9வது நம்பரை அழுத்தியிருக்கிறார்.
உடனே ஒருவர் வர்தனிடம், தான் மும்பை கொலாபாவில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும், உங்களது பெயரில் ஒரு போன் இணைப்பு பெறப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதோடு உங்களது பெயரில் கனரா வங்கியில் ஒரு கணக்கு இருப்பதாகவும், அதனை பணமோசடிக்குப் பயன்படுத்தி இருப்பதாகவும் போனில் பேசிய நபர் தெரிவித்திருக்கிறார். ஆனால் வர்தன் தனக்கு கனரா வங்கியில் எந்த கணக்கும் கிடையாது என்று மறுக்க, உடனே போனில் பேசிய நபர் உங்களது பெயரில் திறக்கப்பட்ட வங்கிக் கணக்கானது ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் தொடர்புடைய நிதிமோசடிக்குப் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
தொழிலதிபர் தனக்கு கனரா வங்கியில் கணக்கு இல்லை என்றும், நரேஷ் கோயலை தெரியாது என்றும், தான் இதற்கு முன்பு ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்து இருப்பதால் அப்போது கொடுக்கப்பட்ட ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் விளக்கமளித்திருக்கிறார்.
“வங்கிக் கணக்குத் திறக்க உங்களது ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டுள்ளதால் உங்கள் மீது சந்தேகப்படுகிறோம். எனவே விசாரணை முடியும் வரை நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்படுகிறீர்கள். யாரையும் தொடர்பு கொள்ளக்கூடாது. இது தேசியப் பாதுகாப்போடு தொடர்புடைய விவகாரம் என்பதால் இது குறித்த தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது” என்று பயமுறுத்தியிருக்கின்றனர்.
அதோடு யாரிடமாவது பேசினால் 3 முதல் 5 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் மிரட்டியிருக்கிறார். அதனைத்தொடர்ந்து, ராகுல் குப்தா என்பவர் வீடியோ காலில் வந்து, தான் தலைமை விசாரணை அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டு பேசியிருக்கிறார். அத்தொழிலதிபரிடம் அவரது இளமைக் காலம், சொத்து போன்ற விபரங்களைக் கேட்டிருக்கிறார். உடனே தனது மேலாளரிடம் கேட்டால்தான் சொத்து மதிப்பு தெரியும் என்று தொழிலதிபர் தெரிவித்திருக்கிறார். விசாரணை அதிகாரிகள் அனைவரும் சிவில் டிரஸில் இருந்தனர். ஆனால் கழுத்தில் அடையாள அட்டைகளைத் தொங்க விட்டிருந்தனர். அதில் மும்பை காவல்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அடையாள அட்டைகள் இருந்தன. அவர்கள் நீதிமன்றம் அறை ஒன்றைக் காட்டியிருக்கின்றனர்.
உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திரசூட் போன்ற ஒருவரைக் காட்டி விசாரணை என்ற ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியாக இருந்தவர் தொழிலதிபருக்குக் கைது வாரண்ட் பிறப்பித்திருக்கிறார். அதோடு 7 கோடியை உடனே செலுத்தும்படி கூறி கைது வாரண்ட் மற்றும் பணத்தைச் செலுத்துவதற்கான உத்தரவை வாட்ஸ் ஆப்பில் அனுப்பியிருக்கிறார். அவர்கள் அனுப்பிய ஆவணங்களில் உச்ச நீதிமன்றம் முத்திரை இருந்திருக்கிறது. இதையடுத்து வர்தன் அவர்கள் கேட்ட பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார்.
அதன் பிறகுதான் இது மோசடி என்று தெரிய வந்திருக்கிறது. உடனே இது குறித்து தொழிலதிபர் டெல்லி காவல்துறையில் புகார் செய்தார். காவல்துறை உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்போடு ரூ.5.25 கோடியை முடக்கினர். இம்மோசடி தொடர்பாக செளதரி மற்றும் ஆனந்த் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஸ்ஸாமைச் சேர்ந்த ஆனந்த் குமார் தனது வங்கிக் கணக்கை மோசடி கும்பல் பயன்படுத்தக் கொடுத்துள்ளார். இம்மோசடியில் தொடர்புடைய எஞ்சியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY