நிசான் நிறுவனம் 2024 ஆம் ஆண்டிற்கான மேக்னைட் எஸ்யூவி மாடலை அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிட உள்ள நிலையில் தற்பொழுது முன்பதிவு நடைபெற்று கொண்டுள்ளதால் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் டெலிவரியும் துவங்க உள்ளது. எனவே, விற்பனைக்கு வருவதற்கு முன்பாக புதிய மேக்னைட்டில் என்னென்ன வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என அறிந்து கொள்ளலாம்.
என்ஜின் விபரம்
தற்பொழுது இடம்பெற்றுள்ள எஞ்சின் விருப்பங்களில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் 1.0 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வெளிப்படுத்துகின்ற நிலையில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் உள்ளது.
அடுத்து, 100 hp பவரினை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் ஆனது 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் மாடலில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.
புதிய வசதிகள்
தோற்ற அமைப்பில் தற்பொழுது உள்ள காரின் அடிப்படையை தக்கவைத்துக் கொண்டாலும், கிரில் அமைப்பு, புதிய எல்இடி புராஜெக்டர் விளக்குகள், பம்பர் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு மாறுதல்களை கொண்டிருப்பதுடன், புதுப்பிக்கப்பட்ட அலாய் வீல் டிசைன் பெற உள்ளது. மற்றபடி, பின்புறத்தில் உள்ள பம்பர் மற்றும் நிறுத்த விளக்குகள் சிறிய மாற்றங்களை கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.
இன்டீரியர் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டீசரில் கருமை நிறத்துக்கு பதிலாக இரு வண்ண கலவையிலான பழுப்பு மற்றும் கருப்பு என இரு வண்ண கலவையில் அமைந்திருப்பதுடன் சிறிய அளவிலான டிசைன் மற்றும் ஸ்டைலிஷான மேம்பாடுகள் கொண்டிருக்கும்.
ஏர் ப்யூரிஃபையர், வயர்லெஸ் சார்ஜிங், கனெக்ட்விட்டி சார்ந்த அம்சங்கள் என பல்வேறு வசதிகளுடன் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பாதுகாப்பு அம்சங்கள்
பொதுவாக தற்பொழுது வருகின்ற மாடல்கள் பார்த் கிராஷ் டெஸ்ட்டிற்கு ஏற்ற தரத்த்தினை பெற்று வருவதனால் புதிய மாடல் சிறப்பான கட்டுமானத்துடன் 6 ஏர்பேக்குகள், இஎஸ்பி, ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்களை பெற்றிருக்கலாம்.
மேக்னைட் விலை எதிர்பார்ப்புகள்
தொடர்ந்து ஆரம்ப நிலை வேரியண்ட் ரூ.6.25 லட்சத்துக்குள் துவங்கினாலும் டாப் வேரியண்ட் விலை ரூ.25,000 முதல் 40,000 வரை விலை உயர்த்தப்படக்கூடும். முழுமையான புதிய நிசான் மேக்னைட் அம்சங்கள் மற்றும் விலை பட்டியல் என அனைத்தும் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகும்.
இந்த மாடலுக்கு போட்டியாக ரெனால்ட் கிகர், மாருதி ஃபிரான்க்ஸ், டொயோட்டா டைசர், டாடா நெக்ஸான், ஹூண்டாய் வெனியூ மற்றும் மஹிந்திரா XUV 3XO , மாருதி பிரெஸ்ஸா உள்ளிட்டவை கிடைக்கின்றது.