ஜெய்பீம் பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த. தொடர் பயணம், வேலை காரணமாக அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாகவும், அதனால் அவரை சென்னை கிரீம்ஸ் ரோடில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின், “நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற விழைகிறேன்” என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கிடையில், இது நடிகர் ரஜினி காந்துக்கு நடக்கும் வழக்கமான உடல் பரிசோதனை என்றும், அவருக்கு வயிற்று வலி எனவும், இருதய பரிசோதனை செய்யப்படுகிறது எனவும் பல செய்திகள் பரவலாக பகிரப்பட்டது. சில தனியார் ஊடகங்களில் ரஜினி காந்தின் மனைவி லதா ரஜினிகாந்த, “ரஜினி காந்த ஆரோக்கியமாக இருக்கிறார்” எனக் கூறியதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் ரஜினி காந்தின் உடல் நலம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இந்த நிலையில்தான் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் ரஜினி காந்தின் உடல் நலம் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில்,
இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கம் அறுவை சிகிச்சை இல்லாமலேயே சரிசெய்யப்பட்டு விட்டது. ரத்தநாளத்தில் ஏற்பட்ட அழுத்தத்திற்கு stent பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. இரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.