சென்னை: வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இயல்பை விட 18 சதவீதம் (39 செமீ) அதிகமாக தென்மேற்குப் பருவமழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பைவிட மிக அதிகமாகவும், 17 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும், 16 மாவட்டங்களில் இயல்பாகவும், 6 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவும் மழைபதிவானது. கடந்த ஆண்டைவிட தமிழக அளவில் இயல்பைவிட 14 சதவீதமும், சென்னையில் 43 சதவீதமும் அதிகமாக மழை பதிவானது.
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளது. இம்மாதத்தின் 3 மற்றும் 4-வது வாரங்களில் மழை பெய்யக் கூடும். வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரை கேரளா, தமிழகம்,தெற்கு கர்நாடகா, ராயலசீமா, ஆந்திரப் பிரதேசத்தில் இயல்பைவிட மழை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது.
வடதமிழகத்தில் இயல்பைவிட அதிகமாகவும், தென்தமிழகத்தில் இயல்பும், இயல்பைவிட குறைவாகவும் பதிவாக வாய்ப்புள்ளது. வெகுகாலத்துக்கு முன்பே வானிலையை கணிக்கும் அளவுக்கு அறிவியல் தொழில்நுட்பம் வளரவில்லை. குறுகிய காலத்தில்அதிகனமழை பெய்கிறது. இருப் பினும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இன்று 7 மாவட்டங்களில் மழை: குமரிக்கடல் மற்றும் உள் தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி,திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.