கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த முனைவர் காமராஜ், ஈஷா யோக மையத்தில் உள்ள தங்களது மகள்களை மீட்டுத்தர சொல்லி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

“நாங்கள் யாருக்கும் ஆதரவோ, எதிர்ப்போ இல்லை. இருப்பினும் சில சந்தேகங்கள் உள்ளன. ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அதேநேரத்தில் மற்றவர்களை சன்னியாசத்துக்கு தூண்டுவது ஏன்.
ஈஷா மீது நிலுவையில் உள்ள வழக்குகள் என்ன என்பதை ஆய்வு செய்து, வருகிற 6ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர். இதையடுத்து கோவை சமூகநலப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், குழந்தைகள் நல அதிகாரிகள், காவல்துறை உள்ளிட்டோர் ஈஷா மையத்தில் நேற்று ஆய்வு செய்தனர்.

மொத்தம் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஆறு குழுக்களாக பிரிந்து ஆய்வு மேற்கொண்டனர். நேற்று காலை தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் அதிகாரிகள் ஈஷா மையத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். நேற்றை போலவே இன்றும் சமூகநலப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், குழந்தைகள் நல அதிகாரிகள், காவல்துறையைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆறு குழுக்களாக பிரிந்து ஈஷா மையத்தில் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஈஷா வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து ஈஷா யோக மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், ‘ஈஷா அறக்கட்டளை யோகா மற்றும் ஆன்மீகத்தை மக்களுக்கு வழங்குவதற்காக நிறுவப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு தனிமனிதனும் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு அவரவர் வாழ்க்கை பாதையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வழங்கி உள்ளது.

ஈஷா யோகா மையம் எவரையும் திருமணம் செய்து கொள்வதற்கோ அல்லது துறவறம் மேற்கொள்வதற்கோ கட்டாயப்படுத்துவதோ, உற்சாகப்படுத்தி உந்தி தள்ளவோ செய்வதில்லை.
ஈஷா யோகா மையம் திருமணம் ஆன, ஆகாத ஆயிரக்கணக்கான மனிதர்கள் மற்றும் பிரம்மச்சரிய பாதையில் இருக்கும் ஒரு சிலரின் இருப்பிடமாக இருக்கிறது. உண்மை இவ்வாறு இருக்கையில் 2 பெண் பிரம்மச்சாரிகளின் பெற்றோர் கடந்த 8 வருடங்களாக பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்தும்,

உள்நோக்கம் கொண்ட சிலரின் தூண்டுதலால் போராட்டங்களை நடத்தி தேவையில்லாத சச்சரவுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
காமராஜின் மகள்களே, பெற்றோர் தொடுத்த வழக்கில் உண்மையில்லை. தங்களது சுயவிருப்பத்திலேயே தங்கி இருக்கிறார்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அவர் பொய்யாக குறிப்பிட்டதை போன்று அறக்கட்டளைக்கு எதிராக வேறு எந்த கிரிமினல் வழக்குகளும் இல்லை.

மனுதாரர் வைத்துள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. ஆகவே ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறியுள்ளனர்.