வாஷிங்டன்: இஸ்ரேல், ஈரான் மோதலை, இரண்டு குழந்தைகள் பள்ளி வளாகத்தில் சண்டையிட்டுக் கொள்வது போல இருப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா, லெபனான் மீதான தாக்குதல்கள், ஹிஸ்புல்லா தலைவர்கள் படுகொலை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை (நேற்று) நள்ளிரவில் இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை நோக்கி ஈரான் ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. உடனடியாக பொதுமக்களுக்கு சைரன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணிகளை அந்நாட்டு அரசு முடுக்கி விட்டது.
இந்நிலையில், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான ட்ரம்ப் அமெரிக்காவில் பரப்புரை மேற்கொண்டபோது இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “தற்போது இரு நாட்டிலும் நிலைமை மோசமடைந்துள்ளது. ஆனால் இது நடந்துதான் ஆக வேண்டும். செவ்வாய்கிழமையன்று இஸ்ரேல் மீது ஈரான் ராக்கெட்டை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நிச்சயமாக நிகழ்ந்திருக்க கூடாது.
பள்ளி வளாகத்தில் இரண்டு குழந்தைகள் சண்டைபோட்டுக் கொள்வதுபோல இது உள்ளது. சில நேரம், என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்கு நீங்கள் அவர்களை அப்படியே விட்டுவிட வேண்டும். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஆனால் நிச்சயமாக இது ஒரு பயங்கரமான போர் என்பதை மறுக்க முடியாது. எனவே மத்திய கிழக்கில் அமெரிக்கா தலையிட்டாக வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடனை விமர்சித்த அவர், “மூன்றாம் உலகப் போரைப் பற்றி நான் நீண்ட காலமாகப் பேசி வருகிறேன். நாங்கள் எதையும் கணிக்கவில்லை ஆனால் அவர்கள் உலகளாவிய பேரழிவுக்கு அருகில் சென்றுவிட்டதாக தெரிகிறது. நான் அதிபராக இருந்தபோது, மத்திய கிழக்கில் போர் நடைபெறவில்லை. ஈரான் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது, இந்த நாட்டை வழிநடத்தும் திறமையற்ற இருவரும், அமெரிக்காவை மூன்றாம் உலகப் போரின் விளிம்பிற்கு இட்டுச் செல்கிறார்கள்.” என்று குற்றம்சாட்டினார்.