ராமேசுவரம்: இலங்கை முன்னாள் அதிபர்களுக்கான சலுகைகளைக் குறைக்க அதிபர் அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த அதிபர்தேர்தலில் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, புதிய அதிபராக பதவியேற்றார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, முந்தையஇலங்கை அரசுகளில் புரையோடிஇருந்த ஊழல், வீண் விரயம்,முறைகேடுகளுக்கு எதிராக செயல்படுவேன் என்றும், முன்னாள் அதிபர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேவையற்ற செலவுகளை குறைப் பேன் என்றும் அறிவித்திருந்தார்.
அமைச்சரவை கூட்டம்: இந்நிலையில், அநுர குமார திசாநாயக்க தலைமையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோர் அடங்கிய அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்தது.
நவ. 14-ல் நடைபெற இருக்கும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேவையான நிதிஒதுக்கீடு செய்வது, அதிபரின் ஆலோசகர்கள், அமைச்சரவை பேச்சாளர், அரசின் செய்தி தொடர்பாளர் நியமனம், குடியுரிமை தலைமை அதிகாரி நியமனம் ஆகியவற்றுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முன்னாள் அதிபர்கள் ஆகியோருக்கான மாத சம்பளம், ஓய்வூதியம், வீடு, வாகனங்கள், பணியாட்கள், அலுவலகஉபகரணங்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட சிறப்புரிமைகள் அனைத்துக்குமான செலவுகள், மக்கள் வரிப்பணத்திலிருந்து மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது செலவுகளை குறைக்க வேண்டியுள்ளதால், முன்னாள் அதிபர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளை குறைப்பதற்கும், மாற்று முறைகளை அறிமுகப்படுத்துவதற்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சித்திரசிறி தலைமையிலான குழுவை அமைத்து அமைச்சரவை கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த குழு 2 மாதங்களில் அதிபரிடம் அறிக்கை சமர்ப் பிக்க வேண்டுமெனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
அமைச்சர் பெறக்கூடிய அனைத்து வகையான சலுகைகளையும் முன்னாள் அதிபர்கள் பெற்று வந்தனர். தற்போதைய நடவடிக்கை மூலம், முன்னாள் அதிபர்களான சந்திரிகா குமாரதுங்க. மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோத்தபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு வழங்கப்படும் சலுகைகள் பெருமளவு குறைக்கப்படுவது உறுதியாகி உள்ளது.