பெய்ரூட்: லெபனான் மீது தரைவழி தாக்குதலைத் தொடங்குவதாக இஸ்ரேல் அண்மையில் அறிவித்த நிலையில், லெபனானின் எல்லைக்குள் இஸ்ரேல் ராணுவமும், ஹிஸ்புல்லா படைகளும் நேரடி மோதலில் ஈடுபட்டு வருகின்றன. எல்லையோரத்தில் இரண்டு இடங்களில் மோதல் நடைபெறுவதாகவும். அதில் ஒரு தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
முதல் சுற்று போர் – ஹிஸ்புல்லா: தெற்கு லெபனானில் நடைபெற்றுவரும் இன்றைய மோதல்கள் ‘முதல் சுற்றுப் போரின்’ ஒரு பகுதி என்று ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஹிஸ்புல்லா செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “எங்களது படைகளும், போராளிகளும் எதிரிகளை (இஸ்ரேல்) எதிர்கொண்டு தாக்குவதற்கு முழு அளவில் தயாராக உள்ளனர். இஸ்ரேல் ராணுவத்துடன் மோதுவதற்கு எங்களின் போராளிக் குழுக்களிடம் போதுமான ஆயுதங்கள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
‘நீலக் கோட்டை மீறிய இஸ்ரேல்’ – இரண்டு தரப்புகளும் நேரடி மோதல்களை அறிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவம் தங்கள் மண்ணில் ஊடுருவியுள்ளதாக லெபனான் தெரிவித்துள்ளது. லெபனானில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸ் – இஸ்ரேல் எல்லையோரத்தில் ஐக்கிய நாடுகள் கண்காணிப்பில் உள்ள நீலக் கோடு எல்லையை இஸ்ரேல் மீறி உள்ளே வந்திருப்பதாக லெபனான் ராணுவம் உறுதி செய்துள்ளது.
லெபனானுக்குள் இஸ்ரேல் வீரர் உயிரிழப்பு: லெபனானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், லெபனான் எல்லைக்குள் இஸ்ரேல் வீரர் ஒருவர் உயிரிழந்திருப்பதை உறுதி செய்துள்ளது. ஐடிஎஃப் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “கேப்டன் எய்டன் யிட்சாக் லெபனான் எல்லைக்குள் புதன்கிழமை நடந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார். 22 வயதான எய்டன், கொரில்லா யுத்தத்தில் சிறப்பு பெற்ற கமாண்டோ பிரிவின் அங்கமான எகோஸ் தளபதியாக இருந்தார்” என்று தெரிவித்துள்ளது.
ஐ.நா பொதுச் செயலாளருக்கு தடை: மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமடைந்து வரும் மோதலை செவ்வாய்க்கிழமை கண்டித்திருந்த ஐ.நா. பொதுச் செயலர் குத்ரேஸ் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் இந்தப் பிரச்சினையில் ‘வரவேற்கப்படாத நபர்’ என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இஸ்ரேல் மீது ஈரான் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலை கண்டிக்கத் தவறிவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் இஸ்ரேலுக்கு எதிரானவர். தீவிரவாதிகள், கொலைகாரர்களுக்கு அவர் ஆதரவு தருகிறார். குத்ரேஸ் ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் ஒரு கறையாக நினைவுகூரப்படுவார்” என்று சாடியுள்ளார்.
டெல் அவிவ் நோக்கிப் பாய்ந்த ஏவுகணைகள்… – பாலஸ்தீனத்தின் காசா, லெபனான் மீதான தாக்குதல்கள், ஹிஸ்புல்லா தலைவர்கள் படுகொலை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை நோக்கி ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
ஈரானின் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஈரான் மிகப் பெரிய தவறை செய்துவிட்டது. இதற்கான விலையை அந்த நாடு கொடுக்கும். யாஃபா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிலும் தெஹ்ரானின் (ஈரான் தலைநகர்) தலையீடு இருந்தது. நம்மை தற்காத்துக் கொள்ளும் நம்முடைய உறுதியை ஈரான் புரிந்து கொள்ளவில்லை.” என்று தெரிவித்திருந்தார்.
‘பதிலடி கடினமானதாக இருக்க வேண்டும்’: இதற்கிடையில், இஸ்ரேல் கொடுக்கும் பதிலடி கடுமையானதாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் யார் லாபிட் தெரிவித்துள்ளார்.
‘பிராந்தியத்தை நெருப்பில் தள்ளியுள்ளது’ – ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டுத் தலைவர், “ஈரான் ஒட்டு மொத்த பிராந்தியத்தையும் நெருப்புக்குள் தள்ளியுள்ளது. என்ன விலை கொடுத்தாவது இது நிறுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். ஜெர்மனியும் அதன் கூட்டாளிகளும் போர் நிறுத்தத்துக்காக தொடர்ந்து முயன்று வருகின்றன.
இந்தியர்களுக்கு எச்சரிக்கை: “ஈரானில் அண்மைய நாட்களாக அதிகரித்து வரும் பாதுகாப்பு சூழலை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அதைக் கருத்தில் கொண்டு அங்கு இந்திய குடிமக்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும், ஈரானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதோடு தெஹ்ரானில் அமைந்துள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு அங்கு வசிக்கும் இந்திய மக்களை கேட்டுக் கொள்கிறோம்” என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழப்பு: இதனிடேயே, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள மருத்துவ அறிக்கைகளின் படி, தெற்கு கான் யூனிஸில் 30 பேர், வடக்கு காசாவில் 25 பேர், மத்திய காசாவில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். கான் யூனிஸில் கொல்ப்பட்டவர்களில் 12 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மேற்கு காசாவில் ஆதரவற்றோருக்கான அல் அமால் நிறுவனத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்கி 5 பேரைக் கொன்றுள்ளது.