ஐ.நா. பொதுச்செயலாளர் இஸ்ரேலில் நுழையத் தடை

ஜெருசலேம்,

இஸ்ரேல் – காசா இடையேயான போரில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

அவர்களை அழிக்கும்வகையில், இஸ்ரேல் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் மற்றும் முக்கியத் தளபதி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்குப் பதிலடி கொடுப்போம் என ஈரான் தெரிவித்திருந்த நிலையில், நேற்று இரவு இஸ்ரேல் மீது 200-க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசியது. ஹைபர்சோனிக் வகையான ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதலை ஈரான் நடத்தியிருக்கிறது. இதனால் அங்கு போர்ப்பதற்றம் நிலவுகிறது.

இந்தநிலையில், ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் வெளியுறவுத்துறை மந்திரி இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இஸ்ரேல் மண்ணில் ஐ.நா. பொதுச்செயலாளர் காலடி எடுத்து வைக்க அந்தோனியோ குட்டரெஸ் தகுதியற்றவர். இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்தன. இதனை செய்யாமல் மவுனம் காக்கும் யாருக்கும் இஸ்ரேல் மண்ணில் கால் வைக்க தகுதி கிடையாது. ஹமாஸ், ஹிஸ்புல்லா ஹவுதி மற்றும் தற்போது ஈரானின் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நபர் இஸ்ரேல் வரலாற்றின் ஒரு கறையாக நினைவுக்கூறப்படுவார் என்றார்.

இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொலை செய்யப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. ஈரானின் தாக்குதலுக்கு உரிய பதிலடி தரப்படும் என்று இஸ்ரேல் எச்சரித்து இருந்தநிலையில் ஈரான் மீண்டும் மிட்டல் விடுத்துள்ளது. ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.