கோவை: 1991-ம் ஆண்டு பொருளாதாரம் சார்ந்து அகற்றப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போது மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள் நிறைந்த பொருளாதாரம், உலகில் போட்டிப் பொருளாதாரமாக வர முடியாது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
அகில இந்திய புரொபஷ்னல்ஸ் காங்கிரஸ் சார்பில், ஜவுளி உற்பத்தி தொழில்துறையினருடனான கலந்துரையாடல் நிகழ்வு கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள தனியார் தனியார் ஓட்டலில் இன்று (அக்.02) மாலை நடந்தது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அகில இந்திய புரொபஷ்னல்ஸ் காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, பொருளாதார நிபுணர் ரத்தின் ராய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பேசியதாவது: “குறு, சிறு தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதியில் போட்டியிட வேண்டும் என்று நினைப்பது பகல் கனவு. இத்தகைய தொழில் நிறுவனங்களின் பொருட்களை உள்நாட்டு சந்தையில் மட்டும்தான் விற்க முடியும். 1991-ம் ஆண்டு பொருளாதாரம் சார்ந்து அகற்றப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போது மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகள் நிறைந்த பொருளாதாரம், உலகில் போட்டிப் பொருளாதாரமாக வர முடியாது. ஜவுளித்துறையில், நிரந்தர தொழிலாளர்கள் இல்லை. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்ற வரவில்லை என்றாலும் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணியாற்ற வருகின்றனர். எனவே ஜவுளித்துறையில் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனை இல்லை. தொழில் நிறுவனத்தினர் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
விண்வெளி ஆராய்ச்சியிலும் அணு ஆயுதத்திலும் உலக நாடுகளுக்கு ஈடான தொழில்நுட்பத்தை நம் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கின்றனர். ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தையும் நம் விஞ்ஞானிகளால் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு அரசு முயற்சி எடுக்கவில்லை” இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.