கரூர்: கரூர் மாநகராட்சியுடன் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று (அக்.2) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மனு அளித்தனர்.
காந்தி ஜெயந்தியையொட்டி, கரூர் அருகேயுள்ள ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி கிராம சபைக் கூட்டம் ஆண்டாங்கோவில் புதூர் மந்தையில் நடைபெற்றது. தலைவர் சாந்தி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், ஊராட்சி தணிக்கை அறிக்கை உள்ளிட்டவை வாசிக்கப்பட்டன. தொடர்ந்து ஹெச்ஐவி விழிப்புணர்வு உறுதிமொழி வாசிக்கப்பட்டு ஏற்கப்பட்டது.
கூட்டத்தில் ஆண்டாங்கோவில் ஊராட்சியை கரூர் மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சார்பாக சக்தி நகர் கே.தேவராஜ், பெரியார் நகர் வி.கந்தசாமி ஆகியோர் மனு அளித்தனர்.
மேலும், அப்பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் கூறியதாவது, “ஆண்டாங்கோவில் ஊராட்சியை கரூர் மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது. இணைத்தால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நிறுத்தப்படும் இதனால் பெண்கள் மிகுந்த பாதிப்புக் குள்ளாவோம்” என தெரிவித்தனர்.
தொடர்ந்து கூட்டம் முடிந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், “கரூர் மாநகராட்சியுடன் ஆண்டாங்கோவில் ஊராட்சியை இணைக்கக் கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இப்பகுதியில் வசிக்கும் பலர் சாதாரண கூலித் தொழிலாளிகள் மாநகராட்சியுடன் இணைத்தால் வரிகள் உயரும். குப்பை வரி வசூலிக்கப் படும். ஏற்கெனவே கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் அடிப்படை வசதிகள் இல்லை. ஆகவே, ஆண்டாங்கோவில் ஊராட்சியை கரூர் மாநகராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து அக்.14-ம் தேதி வேலுசாமிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.” என தெரிவித்தனர்.
இதனிடையே, ‘ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி போராட்டக் குழு’ என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் ‘ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியை கரூர் மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவைக் கைவிடு. பொதுமக்களை போராட தூண்டாதே. அரசு உதவிகள் பறிபோக வழிவகுக்காதே” என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.