சென்னை: ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சியர்களுக்கு, அனுப்பியுள்ள கடிதத் தில் கூறியிருப்பதாவது: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்.2-ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
இக்கூட்டத்தில், கிராம ஊராட்சிகளில் கடந்த ஏப்.1 முதல் செப்.30வரையுள்ள காலத்தில் ஊராட்சியின் பொது நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை படிவத்தை படித்து ஒப்புதல் பெற வேண்டும். கிராம ஊராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறவேண்டும். தூய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்க வேண்டும்.
மேலும், 15-வது மத்திய நிதி மானியக் குழுவால் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் மானிய நிதி, கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் பயன்படுத்தப்பட வேண்டும். கிராம ஊராட்சிகளில் ஏற்கெனவே உள்ள கட்டுமான வசதிகள், இதர வசதிகளை கருத்தில் கொண்டு 2025-26-ம் நிதியாண்டுக்கு தேவையான பணிகளை தொகுத்து கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் தயாரிக்க வேண்டும்.
கிராம வளர்ச்சித் திட்டமானது, கிராம வறுமை குறைப்பு திட்டம், கிராம வளர்ச்சிக்கான நிறைவான சுகாதார மற்றும் குடிநீர் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பு திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்திட்டமாக தயாரிக்கப்பட வேண்டும்.
எனவே, ஊராட்சியில் ஏற்கெனவே உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் இதர வசதிகளை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை தயாரிப்பது குறித்து விவாதிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் பட்டியல் சரிபார்ப்பு, சமூக பதிவேட்டில் சேர்க்கப்படாத மாற்றுத் திறனாளிகள் விவரங்கள் சேகரித்தல், தனித்துவ அடையாள அட்டைகள் வழங்கும் முகாம் நடத்தப்படுவது உள்ளிட்டவற்றை தெரிவிக்கவேண்டும்.
மேலும், ஜல்ஜீவன் இயக்கம் மூலம் செயல்படுத்தப்படும் கிராமகுடிநீர் உட்கட்டமைப்பு பணிகளுக்கு 10 சதவீத சமூக பங்களிப்பை வழங்குவதன் மூலம் கிராம ஊராட்சியின் குடிநீர் திட்டப்பணிகளில் அனைவரும் பங்கேற்பதை உறுதி செய்தல், குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டபின் வீட்டில் உள்ள குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணை பெற்று ஜல் ஜீவன் இயக்க தளத்தில் பதிவு செய்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.