விஜயகாந்தை வைத்து ‘கேப்டன் பிரபாகரன்’, ‘புலன் விசாரணை’ திரைப்படங்களை எடுத்து அடுத்தடுத்த பெரிய ஹிட் படங்களைக் கொடுத்தவர் ஆர்.கே செல்வமணி. விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவர்.
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் `கெத்து’ தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாசிகா, ஜென்சன், சஞ்சனா, பால சரவணன், டி.எஸ்.கே, தேவதர்ஷினி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இப்படத்தில் விஜயகாந்த்தின் தீவிர ரசிகராக வரும் `கெத்து’ தினேஷ், அவரின் என்ட்ரிக்கு ஒலிக்கும் விஜயகாந்த்தின் ‘நீ பொட்டு வச்ச தங்கக் குடம்’ பாடல் கோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்து முணுமுணுக்க வைத்திருக்கிறது. இதையடுத்து சமூகவலைதளமெங்கும் இப்பாடலும், இப்படம் தொடர்பான காணொலிகளும் வைராலாகி ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு இயக்குநர் சங்க உறுப்பினர்களுக்காக `லப்பர் பந்து’ படம் திரையிடப்பட்டது. அதில் ‘லப்பர் பந்து’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் தமிழரசனைப் பாராட்டியிருக்கிறார் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆர்.கே செல்வமணி. இதுகுறித்து பேசியிருக்கும் செல்வமணி, “ஆரவரமில்லாமல் அமைதியாக வந்து, பெரும் வெற்றி பெற்றிருக்கிறது ‘லப்பர் பந்து’ திரைப்படம். நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு நல்ல திரைப்படம் பார்த்திருக்கிறேன். ஒரு கேப்டன் படத்தைப் பார்த்ததுபோல இருந்தது.
ஒரு தரப்பினருக்கு மட்டும் திரைப்படங்கள் எடுக்கக் கூடாது. அனைத்துத் தரப்பினரின் மனதைக் கவரும் வகையில் திரைப்படங்கள் இருக்க வேண்டும். கருத்துகளைச் சொல்லும்போது எதிரியைக் கூட மனம் கலங்க வைக்கும் விதமாகச் சொல்ல வேண்டும். அதை இத்திரைப்படத்தில் மிகச் சிறப்பாகக் கையாண்டு, நன்றாக எடுத்திருக்கிறார்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.
சாதியக் கொடுமைகள் பற்றி திரைப்படங்கள் எடுப்பவர்கள் குறித்த கேள்விக்குக் கூட,’சாதியக் கொடுமையை வேடிக்கப் பார்த்தவனின் பார்வையில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது. பாதிக்கப்பட்டவர்களின் பார்வையில் எடுக்கப்படும் திரைப்படங்கள் அழுத்தமாகத்தான் இருக்கும். இரண்டுக்கும் வேறுபாடுகள் இருக்கிறது’ என்று இயக்குநர் தமிழரசன் சிறப்பாகத் தெளிவாகப் பேசியிருந்தார். அதுதான் என்னுடைய நிலைபாடும்கூட. எதிரிக்குக்கூட மரியாதைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் படைப்பு சிறப்பாக இருக்கும். அதை ‘லப்பர் பந்து’ செய்திருக்கிறது. அதனால்தான் இந்த மிகப்பெரிய வெற்றியும், பாராட்டும் கிடைத்திருக்கிறது” என்று பேசினார்.
மேலும், திரைப்படங்கள் தயாரிப்பது குறித்துப் பேசியவர், “தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் அனைவரும் நடிகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துத் திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும். அதைச் செய்தால்தான் ‘லப்பர் பந்து’ போன்ற நல்ல திரைப்படங்கள் நிறைய வரும். நடிகர்களுக்குக் கதை சொல்லும்போது, அவர்கள் தங்களுக்கானக் காட்சிகள் இருக்கிறதா என்றுதான் பார்ப்பார்கள். கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறிவிடுகிறார்கள். நடிகர்களைவிட கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…