பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத் துறை அதிகாரிகள் நில முறைகேடு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவரது மனைவி அந்த நிலத்தை திரும்பஒப்படைப்பதாக கடிதம் எழுதிஉள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தைமைசூரு நகர்ப்புற மேம்பாட்டுகழகம் கையகப்படுத்தியது.இதற்கு மாற்றாக ரூ.56 கோடி மதிப்புள்ள 14 வீட்டு மனைகளை வழங்கியது. இந்த நிலத்தின் மதிப்பு, கையகப்படுத்திய நிலத்தின்மதிப்பைவிட அதிகமாக இருந்ததால் முறைகேடு நடந்ததாக சமூகஆர்வலர்கள் புகார் தெரி வித்தனர்.
இதையடுத்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட், சித்தராமையா மீதுவழக்குப் பதிவு செய்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதனை விசாரித்த பெங்களூரு சிறப்புநீதிமன்றம், சித்தராமையா மீதானநில முறைகேடு வழக்கை விசாரிக்குமாறு லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு கடந்த 27-ம் தேதி உத்தரவிட்டது. அவர் மீது 10 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்கின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
இந்நிலையில் அமலாக்க துறை அதிகாரிகள் சித்தராமையா மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கில் ஏதேனும் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதா என விசாரிக்கப் போவதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமலாக்க துறையின் வழக்கால் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அவருக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் சித்தராமையா வின் மனைவி பார்வதி மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகத்துக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘என்னிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு மாற்றாக விஜயநகரில் வழங்கப்பட்ட 14 மனைகளின் கிரைய பத்திரங்களை ரத்து செய்ய வேண்டுகிறேன்.
இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது கணவர் சித்தராமையா கடந்த 40 ஆண்டுகளாக அரசியலில் நேர்மையான நெறிமுறைகளுடன் வாழ்ந்து வருகிறார். அவரது பொதுவாழ்வில் எந்த கறையும் ஏற்பட்டதில்லை. என் கணவரின் மானம், மன அமைதியை கருத்தில் கொண்டு, எனக்கு வழங்கப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்கிறேன். அரசியல்விவகாரங்களில் பெண்களை இழுக்கக்கூடாது” என குறிப்பிட் டுள்ளார்.
ராஜினாமா செய்ய மறுப்பு: இதுகுறித்து முதல்வர் சித்தரா மையா கூறுகையில், ‘‘என் மனைவி நிலத்தை திரும்ப ஒப்படைக்கும் முடிவை எடுத்தது ஆச்சரியமாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் வெறுப்பு அரசியல் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இருப்பினும் நான் அநீதிக்குஅடிபணியாமல் போராட முடிவெடுத்துள்ளேன். அமலாக்கத் துறையின்வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். லோக் ஆயுக்தா விசாரணையில் உண்மை வெளிவரும் என நம்புகிறேன். காங்கிரஸ் மேலிடமும் எம்எல்ஏக்களும் எனக்கு ஆதரவாக இருப்பதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்”என தெரிவித்தார்.