சொந்த மண்ணில் இந்தியா ஆதிக்கம் செலுத்த இந்த இருவர்தான் முக்கிய காரணம் – ஆகாஷ் சோப்ரா

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2012-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியிடம் இழந்தது. அதனை தொடர்ந்து கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சொந்த மண்ணில் நடைபெற்ற 18 டெஸ்ட் தொடர்களையும் வென்று தோல்வியையே சந்திக்காத அணியாக வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எந்த அணியாலும் வீழ்த்த முடியாததற்கான காரணங்கள் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 12 வருடங்களாக சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவர்தான் முக்கிய காரணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, இந்தியா தங்களது சொந்த மண்ணில் 18 டெஸ்ட் தொடர்களை தொடர்ச்சியாக வென்றுள்ளது. இது சாதாரணமான விசயம் இல்லை. இந்தியா இத்தனை தொடர்களை வென்றதற்கு காரணமே சுழற்பந்து வீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர்தான். இந்தியாவில் இந்திய அணி 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடிகிறது என்றால் அதில் பெரும்பாலும் இவரது பங்கே உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 525 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 11 தொடர் நாயகன் விருதினை வென்று முத்தையா முரளிதரனுக்கு அருகில் நிற்கிறார். அதேபோன்று ரவீந்திர ஜடேஜாவும் 3000 ரன்கள், 300 விக்கெட் என ஒருபுறம் ஆதிக்கம் செலுத்தியுள்ளார். இவர்கள் இருவருமே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய டெஸ்ட் அணிக்கு சொந்த மண்ணில் மிகப்பெரிய பலமாக இருந்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.