திருப்பதி: ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், திருப்பதி ஏழுமலையானை தரிசித்து, தனது 11 நாள் விரதத்தை நிறைவு செய்தார். இன்று (புதன்கிழமை) விஐபி பிரேக் தரிசனத்தின் போது அவர் சுவாமியை தரிசித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாத நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சிக்கு கண்டனம் தெரிவித்தும், ஏழுமலையானிடம் மன்னிப்பு கோரும் விதமாகவும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ‘பிராயச்சித்த தீக்ஷா’ என்ற 11 நாள் விரதத்தை கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கினார். இந்த விவகாரத்தில் ஆளும் ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மாலை அணிந்து 11 நாட்கள் விரதம் இருந்த அவர், திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்துள்ளார். நேற்று மாலை அலிபிரி வழியாக படியேறி திருமலையை அடைந்தார். சுமார் 3,550 படிகள் கொண்ட மலை பாதையில் ‘கோவிந்தா.. கோவிந்தா..’ என ஏழுமலையான் நாமத்தை சொன்னபடி அவர் படி ஏறினார். அப்போது கோயில் நிர்வாகிகளிடம் சிறுத்தை நடமாட்டம் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்நிலையில், இன்று தனது இரண்டு மகள்களுடன் அவர் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் திருமலையில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். நாளை மாலை திருப்பதியில் இருந்து விஜயவாடாவுக்கு அவர் செல்கிறார்.