மதுரை: திருமாவளவன் நடத்தியது மது ஒழிப்பு மாநாடு அல்ல. மதுபிரியர்களின் மாநாடு என மதுரையில் பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார்.
மதுரையில் இன்று (அக்.02) நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்ப்பு முகாமில் பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பழனி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற ஒன்றரை ஆண்டில் ராஜகோபுரத்தில் சேதமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். திமுக ஊழல் ஆட்சியில் கோயில்களை கூட விட்டுவைக்கவில்லை.
அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகிக்க கொஞ்சமும் தகுதியில்லாதவர் சேகர்பாபு. இந்து மதத்தை வைத்து, கோயிலை வைத்து ஊழல் செய்கின்றனர். இதனால் கடந்த 3 ஆண்டுகளில் கோயில் கும்பாபிஷேக கட்டுமானங்களின் தரம் குறித்து ஆய்வும், வெள்ளை அறிக்கையும் வெளியிட வேண்டும். ஆர்எஸ்எஸ் ஊர்வலம் வழக்கில் திமுக அரசை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் இந்துக்களுக்கு பெரிய ஆபத்து உள்ளது. இந்துக்கள் இந்த தீய அரசை புரிந்து கொண்டு தூக்கி எரிய தயாராக வேண்டும். அதற்கான வாய்ப்பு 2026-ல் வருகிறது. இதனால் திமுக அரசியல் களத்தில் இருக்கக்கூடாது என இந்துக்கள் முடிவெடுக்க வேண்டும்.
விசிக நடத்துவது மது ஒழிப்பு மாநாடா? மதுபிரியர்கள் மாநாடா? உண்மையிலேயே அது மது ஒழிப்பு மாநாடாக இருந்தால் டாஸ்மாக் கடைகளை திறந்த திமுகவினரை அழைத்தது எப்படி? மக்களை திசை திருப்ப மத்திய அரசுக்கு எதிராக மடை மாற்றுவதற்கான கூட்டுச் சதி தான் இந்த மாநாடு. பட்டியல் சமுதாயத்தினருக்கு கூட திருமாவளவன் தலைவர் அல்ல. அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை ஏற்க மனது இல்லாதவர். அவர் கூட்டணி கட்சிகளின் மாநாட்டை நடத்தியுள்ளார்.
திமுகவில் கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால் தலைமையில் இடமில்லை என்ற செய்தியை உதயநிதியை துணை முதல்வராக அறிவித்து துரைமுருகன், நேரு போன்ற 60 முதல் 50 ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளனர். தமிழக அமைச்சரவை மாற்றத்திற்கு பல காரணம் இருக்கும். அதற்கும் பாஜகவுக்கும் தொடர்பு இல்லை.
ஆளுநர் நேர்மை உணர்வுடன் காந்தி நினைவு மண்டபத்தில் மதுபாட்டில் இருந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு சட்ட அமைச்சர் இரவில் நடக்கும் சம்பவங்களுக்கு அரசால் ஒன்றும் செய்ய முடியாது என பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளார். அடுத்த தலைமுறையை அழிக்கும் சித்தாந்ததின் பெயர் தான் திராவிட மாடல்” இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார். மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், அமர் பிரசாத் ரெட்டி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.