மும்பை: நடிகரும், சிவ சேனா கட்சி (ஷிண்டே அணி) பிரமுகருமான கோவிந்தாவின் உரிமம் பெற்ற கைத் துப்பாக்கி (ரிவாவல்வர்) தவறுதலாக கீழே விழுந்து வெடித்ததில் அவரின் காலில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது காலில் இருந்த துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டுவிட்டது, அவர் தற்போது நலமாக உள்ளார் என்று அவரது மேலாளர் ஊடகப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு வெளியே செல்வதற்கு கோவிந்தா கிளம்பிக்கொண்டிருந்த போது தனது உரிமம் பெற்றத் துப்பாக்கியை சுத்தம் செய்த போது இந்தச் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
துப்பாக்கி வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து அவர் மும்பையின் க்ரிட்டிகேர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் நடைபெற்ற போது கோவிந்தாவின் மனைவி சுனிதா அஹுஜா மும்பையில் இல்லை. இருப்பினும், தற்போது கோவிந்தா நலமாக உள்ளதாகவும், அபாய கட்டத்தை கடந்து விட்டதாகவும் அஹுஜா தெரிவித்தார். தற்போது கோவிந்தாவுடன் மருத்துவமனையில் அவரது மகள் இருக்கிறார்.
இந்த விபத்துச் சம்பவம் குறித்து கோவிந்தாவின் மேலாளர் ஷசி சின்ஹா கூறுகையில், “நடிகர் கோவிந்தா கொல்கத்தா செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கைத்துப்பாக்கியை அலமாரியில் வைக்கும்போது அது அவரது கையில் இருந்து நழுவி கீழே விழுந்து வெடித்து அதன் தோட்டா அவரது காலில் பாய்ந்தது.” என்று தெரிவித்தார்.
90-களின் சூப்பர்ஸ்டாராக விளங்கிய நடிகர் கோவிந்தா, தனது நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்களுக்காகவும், நடனப் பாடல்களுக்காகவும் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார். இவர் இந்தாண்டின் மார்ச் மாதத்தில் தனது அரசியல் மறுபிரவேசத்தை அறிவித்தார். பின்பு, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தார். 2024 மக்களவைத் தேர்தலில் வடமேற்கு மும்பையில் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீட் கிடைக்காமல், சிவசேனாவுகாக பிரச்சாரம் மற்றும் மேற்கொண்டார்.
முன்னதாக, கடந்த 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, பாஜகவைச் சேர்ந்தவரும் ஐந்து முறை எம்பியாக இருந்தவருமான ராம் நாயக்-ஐ 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.