வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் சிறப்பாக வென்றுள்ளது. இதன் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடி வெற்றியை பெற்றுள்ளது. அடுத்ததாக அக்டோபர் 16 ஆம் தேதி நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூஸிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்தியாவுக்கு இந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானது. நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக WTC இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.
அதிகம் எதிர்பார்க்கப்படும் பார்டர் கவாஸ்கர் தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளதால் பிசிசிஐ இந்திய வீரர்களை பத்திரமாக பார்த்து வருகிறது. ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டாலும் அணியில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மேலும் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி சில மாற்றங்களைச் செய்யலாம். முழு வலிமை கொண்ட அணியாக விளையாடி மீண்டும் பார்டர் கவாஸ்கர் தொடரை வெல்ல தயாராகி வருகிறது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை மனதில் கொண்டு தொடரில் சில வீரர்களை தைரியமாக அணியில் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் நடைபெற்ற இலங்கை தொடரில் ருதுராஜ் பெயர் இடம்பெறவில்லை, அடுத்த சில நாட்களில் தொடங்கும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவரது பெயர் இல்லை.
இதன் காரணமாக ருந்துராஜ் ரசிகர்கள் கோபத்தில் இருந்தனர். தற்போது ருதுராஜ் துலீப் டிராபி, இரானி கோப்பை ஆகிய தொடர்களில் விளையாடி வருகிறார். மேலும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் பேக்அப் தொடக்க ஆட்டக்காரராக ருதுராஜ் கெய்க்வாட்டை பிசிசிஐ கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கெய்க்வாட் இடம் பெற வாய்ப்புள்ளது. பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இரண்டு போட்டியிலும் விளையாடி இருந்தார் பும்ரா. ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியாவின் வெற்றிக்கு பும்ரா போன்ற ஒரு துல்லியமான பந்துவீச்சாளர் அணிக்கு தேவை. எனவே அவரது பணிச்சுமையை மனதில் வைத்து நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவருக்கு ஓய்வு வழங்கப்படலாம்.
முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற உள்ளது. அந்த மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிகம் உதவும் என்பதால் பும்ரா அணியில் இடம் பெறாமல் போகலாம். பும்ரா இல்லாத சமயத்தில் முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களும் முக்கியமானவர்களாக இருப்பார்கள். அதே சமயம் இந்திய அணி ஒரு பேக்அப் பந்துவீச்சாளரை தேடி வருகிறது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் மயங்க் யாதவை இந்தியா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் பெயரையும் பரிசீலித்து வருகின்றனர். பங்களாதேஷ் டி20 தொடரில் மயங்க் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் உடற்தகுதியை பொறுத்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறலாம்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்தியாவின் உத்ததேச அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (C), ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஆர் அஷ்வின், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், குல்தீப் யாதவ்